விளையாட்டு
இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம்: கை குலுக்க மறுத்த சூர்யகுமார் – காரணம் என்ன?
இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம்: கை குலுக்க மறுத்த சூர்யகுமார் – காரணம் என்ன?
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டனுடன் கை குலுக்க மறுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் குரூப் ஏ ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் போடும் போது, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கை குலுக்க மறுத்தார்.ரவி சாஸ்திரி இரு அணி கேப்டன்களையும் அறிமுகப்படுத்தியதும், சூர்யகுமார் கை குலுக்க மறுத்துவிட்டார். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவும் கை குலுக்க முன்வரவில்லை. அவர் அணி பட்டியலை நடுவரிடம் கொடுத்துவிட்டு, ரவி சாஸ்திரியுடன் உரையாடினார். அதன் பிறகு, அவர் டிரெஸ்ஸிங் ரூமுக்கு திரும்பினார். அப்போது இரு கேப்டன்களும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்க்கவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் கிரிக்கெட் போட்டி இதுவாகும். இந்த ஆட்டம் பெரும் அரசியல் பின்னணியில் நடைபெறுகிறது. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்திய ரசிகர்கள் ஆட்டத்தை புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளங்களில் கோஷமிட்டு வருகின்றனர்.இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்ஷே தனது வீரர்கள் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டுள்ளனர் என்று தெரிவித்தார். இதை உறுதிப்படுத்தும் விதமாக சூர்யகுமார் யாதவ் நடந்து கொண்டார். இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, சூர்யகுமார் யாதவ் டாஸ் போடுவதற்கு முன்பு தனது சக வீரர்களுடன் பேசினார். பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவது அவரவர் விருப்பம் என்று கூறினார். இதற்கு முன்பு, பாகிஸ்தான் வீரர் ஃபஹீம் அஷ்ரப் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தும் விதமாக ஆபரேஷன் சிந்தூரை கேலி செய்தார். அவர் இந்த ஆட்டத்தில் விளையாடி வருகிறார்.ஆட்டத்திற்கு முன்பு, இரு அணிகளுக்கும் இடையே எந்தவிதமான மோதலும் ஏற்படக்கூடாது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர் தனது வீரர்களிடம் “கிரிக்கெட்டில் கவனம் செலுத்துங்கள். வெளியிலிருந்து வரும் விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.சில தினங்களுக்கு முன்பு, செய்தியாளர் சந்திப்பின் போது, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, சூர்யகுமாருடன் கை குலுக்க மறுத்துவிட்டு மேடையிலிருந்து வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பிறகு சூர்யகுமார் கை குலுக்க முயன்ற போது, ஆகா திரும்பி வந்து அவரிடம் கை குலுக்கினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, சூர்யகுமார் ஆகா மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருடன் கை குலுக்கியதைக் கண்டு ரசிகர்கள் கோபமடைந்தனர்.
