விளையாட்டு
மீண்டும் சோதிக்கும் காயம்… தமிழ் தலைவாசின் சாகர் ஆடுவதில் நீடிக்கும் சிக்கல்
மீண்டும் சோதிக்கும் காயம்… தமிழ் தலைவாசின் சாகர் ஆடுவதில் நீடிக்கும் சிக்கல்
12-வது புரோ கபடி லீக் தொடரில் இன்று (செப்டம்பர் 16) செவ்வாய்க்கிழமை ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள் அரங்க மைதானத்தில் நடைபெறும் 36-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதுகிறது. நடப்பு தொடரில் 4 போட்டிகளில் ஆடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி இரண்டு வெற்றிகள் மற்றும் இரண்டு தோல்விகள் என நான்கு புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், பெங்களூரு புல்ஸ் அணி ஏழு போட்டிகளில் ஆடி 4-ல் வெற்றி, 3-ல் தோல்வி என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ், இந்த சீசனின் தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 38-35 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் யு மும்பா அணியிடம் 36-33 என்ற கணக்கில் தோல்வியடைந்த அந்த அணி, மூன்றாவது போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியிடம் 37-28 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர்.தொடர்ந்து, தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 46-36 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதன் மூலம் அந்த அணி தொடரில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. அதனால், அதே உத்வேகத்துடன் பெங்களூரு அணியை எதிர்கொள்வார்கள். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. சாகர் ரதீ இன்றைய போட்டியில் விளையாடுவாரா?பெங்களூரு புல்ஸுக்கு எதிரான தமிழ் தலைவாஸ் அணியில் இன்றிரவு மோதும் போட்டியில் சாகர் ரத்தீ இடம்பெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஏனெனில், அவர் தற்போது மறுவாழ்வு சிகிச்சையில் உள்ளார், இன்னும் காயத்திலிருந்து மீளவில்லை. இது தொடர்பாக தமிழ் தலைவாஸ் அணி வெளியிட்ட அறிக்கையில், “காயத்திலிருந்து முழுமையாக மீள்வதை உறுதி செய்வதற்காக சாகர் தற்போது மறுவாழ்வு சிகிச்சையில் உள்ளார். முழு உடற்தகுதிக்கு திரும்பியதும் அவர் மீண்டும் அணியில் இணைவார்” எனக் கூறப்பட்டுள்ளது.இந்த சீசனுக்கான முகாமின் போது சாகர் ரத்தீ காயமடைந்தார். அதனால் அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும், அவர் மூன்றாவது போட்டியில் விளையாடினார். ஆனால் காயம் காரணமாக அவர் சரியாக செயல்பட முடியவில்லை. பின்னர் பயிற்சியாளர்கள் சாகருக்கு முழு உடல் தகுதி கிடைக்கும் வரை ஓய்வு அளிக்க முடிவு செய்தனர்.கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக சாகர் நியமிக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக சீசனின் நடுப்பகுதியில் அவர் விளையாடவில்லை. இந்த முன்னதாக அவரை அணி தக்க வைத்துக் கொண்டது. அவர் எப்போது மீண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
