விளையாட்டு
யார் இந்த அருளானந்த பாபு? தமிழ் தலைவாஸ் அணியில் புதிதாக இணைந்த தமிழக ஸ்டார்
யார் இந்த அருளானந்த பாபு? தமிழ் தலைவாஸ் அணியில் புதிதாக இணைந்த தமிழக ஸ்டார்
12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள்அரங்க மைதானத்தில் நடைபெற்ற 42-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 43 – 29 புள்ளிகள் கண்ணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 12 புள்ளிகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ள தமிழ் தலைவாஸ், இன்று சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக நடக்கும் ஆட்டத்தில் மீண்டு வர முயற்சிக்கும். அதனால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இந்நிலையில், நேற்று தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி சார்பில் தமிழக வீரர் அருளானந்த பாபு களமிறக்கப்பட்டார். சென்னையை தலைமையிடமாக கொண்ட அணியில் ஒரு தமிழக வீரர் கூட இல்லை என்கிற விமர்சனம் எழுந்தது. இந்த சூழலில், அணியின் கேப்டனாக இருந்த பவன் செஹ்ராவத் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அவரது இடத்தில் தமிழக வீரர் அருளானந்த பாபு சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.
