இலங்கை
பாதாள உலகக் குழுவுக்கு உதவிய பொலிஸ் அதிகாரியைக் கைதுசெய்ய நடவடிக்கை
பாதாள உலகக் குழுவுக்கு உதவிய பொலிஸ் அதிகாரியைக் கைதுசெய்ய நடவடிக்கை
பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள உலக குழு நபர்களை கைதுசெய்ய பொலிஸ் குழுவொன்று இந்தோனேசியாவிற்கு சென்றுள்ள தகவலை பாதாள உலகக் குழுவிற்கு தெரிவித்ததாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரியைக் கைதுசெய்ய விரிவான விசாரணைகளைத் பொலிஸார் தொடங்கியுள்ளனர்.
பொலிஸ் சேவையில் ஈடுபட்டுகொண்டே அவர் இவ்வாறானதொரு செயலில் ஈடுபட்டுள்ளமையினால் அவர் நிச்சயம் தண்டிக்கப்படுவார் எனவும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்கள் ரோஹன் ஒலுகல மற்றும் மஹிந்த ஜெயசுந்தர ஆகியோர் தன்னைக் கைதுசெய்ய இந்தோனேசியாவிற்கு வந்ததாக ஒரு தலைமை பொலிஸ் அதிகாரி தனக்குத் தகவல் அளித்ததாக தற்போது துபாயில் இருக்கும் பாதாள உலகக் குழுவை சேர்ந்த தரூன் வெளிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, இரண்டு உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்கள் இந்தோனேசியாவிற்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவுடன், கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழுக்கள் தாங்கள் தங்கியிருந்த சொகுசு குடியிருப்பை கைவிட்டு வேறு அடுக்குமாடி குடியிருப்பிற்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இந்த இரகசிய தகவலின் காரணமாக, இந்த பாதாள உலகக் குழுக்களை கைதுசெய்ய முடியாவிட்டால், அது மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கெஹல்பத்தர பத்மேவுக்கு சர்வதேச பொலிஸ் பிரிவில் சிவப்பு பிடியாணை பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த பொலிஸ் அதிகாரி சம்பந்தப்பட்ட சிவப்பு பிடியாணையின் நகலை கெஹல்பத்தர பத்மேவின் வட்ஸ்அப் தொலைபேசிக்கு அனுப்பியதாகவும் தெரியவந்துள்ளது.
