பொழுதுபோக்கு
படையை கண்டு பயந்த பாம்பு; சிவாஜி படப்பிடிப்பில் காணாமல் போன சம்பவம்: புராண பட ரியல் பரபரப்பு
படையை கண்டு பயந்த பாம்பு; சிவாஜி படப்பிடிப்பில் காணாமல் போன சம்பவம்: புராண பட ரியல் பரபரப்பு
சிவாஜி நடித்த பெரிய வெற்றியை பெற்ற புராண படம் ஒன்றின் படப்பிடிப்பின்போது, படத்தில் நடிக்க வந்த பாம்பு பயந்துபோய் ஒளிந்துகொண்ட சம்பவம் குறித்து அந்த படத்தின் இயக்குனரின் மகள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் பக்தி படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் கடந்த 1967-ம் ஆண்டு வெளியான படம் திருவருட்செல்வர். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், சாவித்ரி, பத்மினி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். பெரியபுராணத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை, இயக்குனர் ஏ.பி.நாகராஜனின் மகள் ஒரு பேட்டியில் கூறியு்ளளார். அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், திருவருட்செல்வர் படத்தின் படப்பிடிப்பை பார்க்க நான் சென்றிருந்தேன். அதில் என் அப்பா ஏ.பி.நாகராஜனும் நடித்திருந்தார். அந்த படத்தில் அவருக்கு வயது 80, ஒரு சிறுவனை பாம்பு கடித்துவிடும். அவனை தூக்கி வந்து கோவிலில் வைத்துக்கொண்டு பாடல் பாடுவார்.அந்த பாடல் தான் ‘நாகர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே’ என்ற பாடல். இந்த பாடலின் முடிவில் அந்த பாம்பே வந்து சிறுவனின் உடலில் உள்ள விஷத்தை எடுத்துக்கொள்ளும். ஆனால் படப்பிடிப்பின்போது அந்த பாம்பு மெதுவாக வந்ததால் இப்படி இருந்தால் சரியாக இருக்காது கட் கட் என்று கூறியுள்ளார். அப்போது சிகப்பு கலர் துணியை பாம்புமேல் போட்டு எடுத்தால் பாம்பு படம் எடுக்கும். அதை ஏன் செய்யவில்லை என்று கேட்டுக்கொண்டு இருக்கும்போதே ஒரு சலசலப்பு ஏற்பட்டது.அப்போது அப்பா என்ன ஆச்சு என்று கேட்டபோது, தயாரிப்பு நிர்வாகிகள், மொத்தம் 8 பாம்பு கொண்டு வந்திருக்கிறார். அதில் 7 பாம்புதான் இருக்கிறது ஒன்றை காணவில்லை என்று தயங்கி தயங்கி சொன்னார்கள். இதை கேட்டவுடன் நான் பயத்தில் ஒரு திட்டு மாதிரி இருந்த இடத்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். படத்தில் நடிக்க வந்த குழந்தையை அங்கே காணவில்லை. இதனால் அங்கு சலசலப்பு அதிகமானது. அதன்பிறகு கொஞ்ச நேரத்தில் பாம்பு கிடைத்துவிட்டது என்று சொன்னார்கள். ஆனால் நான் கீழே இறங்கவே இல்லை.பாம்பை கண்டால் படை நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு படையை பார்த்து பாம்பு போய் ஒளிந்துகொண்டது. இந்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.
