Connect with us

இந்தியா

‘ஸ்வச் பாரத்’ நிதி மோசடி: கழிவறை கட்டியதாகக் கணக்கு காட்டி ரூ.23 லட்சம் கையாடல்; அரசு இன்ஜினியர் உள்பட 9 பேர் மீது வழக்கு

Published

on

Pondy Vigilance

Loading

‘ஸ்வச் பாரத்’ நிதி மோசடி: கழிவறை கட்டியதாகக் கணக்கு காட்டி ரூ.23 லட்சம் கையாடல்; அரசு இன்ஜினியர் உள்பட 9 பேர் மீது வழக்கு

புதுச்சேரி வில்லியனூர், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மத்திய அரசின் ‘ஸ்வச் பாரத் மிஷன்’ திட்ட நிதியில் ரூ. 23.10 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, ஒரு இளநிலை பொறியாளர் உட்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவறைகள் கட்டாமலேயே கட்டி முடிக்கப்பட்டதாக ஆவணங்களைத் தயாரித்து இந்தப் பெரும் தொகை கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ், கிராமப்புறங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் நோக்கில், ‘ஸ்வச் பாரத் மிஷன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கழிவறை இல்லாத வீடுகளுக்கு மத்திய, மாநில அரசின் நிதி உதவியுடன் ரூ. 20 ஆயிரம் மானியம் வழங்கி கழிவறைகள் கட்டித் தரப்படுகின்றன. இந்நிலையில், வில்லியனூர் மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துகளில் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்படாமல், அதற்கான பணம் கையாடல் செய்யப்பட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குப் புகார்கள் சென்றன.புகாரின் பேரில், வட்டார வளர்ச்சி அதிகாரி தயானந்த் டெண்டோல்கர் விசாரணை நடத்தினார். விசாரணையில், மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரங்கள் தெரியவந்தன. முன்னர் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்தவரும், தற்போது பொதுப்பணித் துறையில் இளநிலை பொறியாளராகப் பணிபுரிகிறவருமான விவேகானந்தம் என்பவர், பல்வேறு கட்டுமான நிறுவனங்களுக்கு கழிவறைகள் கட்டிக் கொடுக்கும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகப் போலியான ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். இவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்த ராஜசேகரன் உடந்தையாகச் செயல்பட்டுள்ளார்.கிராமப் பகுதிகளில் கழிவறைகள் கட்டப்படாமலேயே கட்டியதாகக் கூறி, இளநிலை பொறியாளர் விவேகானந்தம், ராஜசேகரன் மற்றும் ஒப்பந்ததாரர்களான சைமன், குருசாமி, ஆரோக்கியசாமி, மகாலட்சுமி, தண்பாணி, பலராமன், பூங்கொடி ஆகிய 9 பேரும் சேர்ந்து மொத்தம் ரூ. 23 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை மோசடி செய்தது உறுதிசெய்யப்பட்டது. இந்த மோசடி குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி தயானந்த் டெண்டோல்கர், புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட 9 பேர் மீதும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த மோசடி சம்பவம் புதுச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செய்தி: பாபு ராஜேந்திரன் – பாண்டிச்சேரி

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன