Connect with us

இந்தியா

ஐ.பி.எஸ் அதிகாரி தற்கொலை: இரவோடு இரவாக விடுப்பில் அனுப்பப்பட்ட ஹரியானா டி.ஜி.பி

Published

on

haryana dgp

Loading

ஐ.பி.எஸ் அதிகாரி தற்கொலை: இரவோடு இரவாக விடுப்பில் அனுப்பப்பட்ட ஹரியானா டி.ஜி.பி

மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒய். பூரன் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அரசியல் மற்றும் பொதுமக்களின் அழுத்தம் அதிகரித்ததையடுத்து, ஹரியானா அரசு நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஹரியானா காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சத்ருஜீத் கபூர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். மேலும், சில நாட்களுக்கு முன்பு ரோத்தக் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) நரேந்திர பிஜார்னியா மாற்றப்பட்டார்.2001-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியும், கூடுதல் டிஜிபி-யுமான ஒய். பூரன் குமார், கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி சண்டிகரில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய ஒன்பது பக்க “இறுதிக் குறிப்பில்”, தான் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும், டிஜிபி கபூர், எஸ்.பி. பிஜார்னியா உட்பட பல மூத்த காவல்துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் தன்னை சாதி ரீதியாக துன்புறுத்தியதாகவும் மற்றும் தொழில் ரீதியான பழிவாங்குதலுக்கு ஆளாக்கியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.டிஜிபி விடுப்பில் அனுப்பப்பட்டதை ஹரியானா முதலமைச்சரின் ஊடக ஆலோசகர் ராஜீவ் ஜெயிட்லி உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், இந்த விடுப்பின் காலம் குறித்து அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிக்கவில்லை. கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். குமாரின் மனைவி, ஐஏஎஸ் அதிகாரியான அம்னீத் பி குமார், ஒரு வார காலமாக அவரது பிரேத பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். தற்கொலைக் குறிப்பில் பெயரிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகள் மீதும் அரசு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.சண்டிகர் காவல்துறை, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது. குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் பிரேத பரிசோதனையைத் தொடர முடியாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் போராட்டங்களும் அரசியல் அழுத்தமும் அதிகரித்துள்ளன. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அதவாலே திங்கட்கிழமை சண்டிகரில் அம்னீத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர், அவர் முதல்வர் நயாப் சிங் சைனியைச் சந்தித்து, குடும்பத்தினரின் கோரிக்கைகள் மீது விரைவான மற்றும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.பட்டியலின அமைப்புகள் மாநில அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (செவ்வாய்க்கிழமை) குடும்பத்தினரைச் சந்திக்க உள்ளார். இந்த சூழலில், “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்” என்று ஹரியானா அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன