இலங்கை
வங்காள விரிகுடாவில் நாளை காற்றுச்சுழற்சி! கன மழைக்கு வாய்ப்பு
வங்காள விரிகுடாவில் நாளை காற்றுச்சுழற்சி! கன மழைக்கு வாய்ப்பு
இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் நாளை காற்றுச்சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இது மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறதுஎன யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2025/2026 ம் ஆண்டுக்கான வடகீழ்ப் பருவக்காற்று தொடங்குவதற்கான ஏது நிலைகள் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ளன.
வங்காள விரிகுடாவில் கீழை அலைகளின் வருகை, இந்து சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை மாற்றம், மேடன் ஜூலியன் அலைவின் வருகை. இன்று மாலை இவ்வலைவின் வருகை தெற்கு இந்து சமுத்திரத்தில் பதிவாகியுள்ளது.
மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation) என்பது அயனமண்டல வளிமண்டலத்தில் ஏற்படும் மிகப்பெரிய, இயற்கையான, 30 முதல் 90 நாள் வரையிலான கால இடைவெளியில் மாறும் ஒரு வானிலை நிகழ்வாகும்.
வடகீழ்ப் பருவமழை உட்பட, உலகின் பல்வேறு பகுதிகளில் வானிலை மற்றும் மழைவீழ்ச்சி மீது இந்த அலைவு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இது புயல்களின் உருவாக்கத்திற்கும், தீவிரமடைதலுக்கும் காரணமாக அமைகிறது.
உதாரணமாக, வங்காள விரிகுடாவில் புயல் உருவாகும் போது, மேடன்-ஜூலியன் அலைவின் தாக்கம் காரணமாக அதன் தீவிரமடைதல் அதிகரிக்கலாம்.
அயன இடை ஒருங்கல் வலயத்தின் விரிவாக்கம் இலங்கை, தென்னிந்திய மற்றும் வங்காள விரிகுடாவையும் உள்ளடக்கியுள்ளமையின் காரணமாக எதிர்வரும் 18.10.2025 அன்று இலங்கையின் வட கிழக்கு கரையோரத்தில் இவ்வாண்டின் வடகீழ்ப் பருவ மழை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை தற்போது வங்காள விரிகுடாவிற்கு வந்துள்ள மேடன் ஜூலியன் அலைவு எதிர்வரும் நவம்பர் 10 ம் திகதி வரை வங்காள விரிகுடாவில் நீடிக்கும் என்பதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி எதிர்வரும் 10.11.2025 வரை தொடரும்.
அதேவேளை நாளை இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் காற்றுச்சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே,தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை நாளை முதல் தீவிரமடையும்.
குறிப்பாக 16- 19, மற்றும் 22-31 காலப்பகுதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக்கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இடி மின்னலோடு இணைந்ததாகவே இம்மழை இருக்கும் என்பதனால் இடி மின்னல் நிகழ்வுகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.
எதிர்வரும் 15, 16, 17, 18, மற்றும் 19ம் திகதிகளில் மத்திய மாகாணம், தென் மாகாணம், மேல் மாகாணம், ஊவா மற்றும் சபரகமுவா மாகாணங்களில் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்நாட்களில் கிடைக்கும் கனமழை காரணமாக பல இடங்களில் மண்சரிவுக்கான வாய்ப்புக்கள் உள்ளன.
நாளை முதல் எதிர்வரும் 19.10.2025 வரை வடக்கு, கிழக்கு, தெற்கு கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ. காணப்படும்.
இப்பிரதேச கடற்கரையோரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் காணப்படும்.
நாளை முதல் எதிர்வரும் 19.10.2025 வரை இலங்கையின் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
