உலகம்
போதைப்பொருள் நீர்மூழ்கிக் கப்பலை அழித்து 25,000 அமெரிக்கர்களைக் காப்பாற்றிய டிரம்ப்!
போதைப்பொருள் நீர்மூழ்கிக் கப்பலை அழித்து 25,000 அமெரிக்கர்களைக் காப்பாற்றிய டிரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்காவை நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தல் நீர்மூழ்கிக் கப்பல் மீது அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டு, அது அழிக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 25,000 அமெரிக்கர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்காவுக்குள் நுழைந்து கொண்டிருந்த ஒரு பெரிய நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழித்ததாக டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கப்பலில் பெரும்பாலும் ஆபத்தான ‘ஃபென்டானைல் , மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொருட்கள் நிரம்பியிருந்ததாக அமெரிக்க உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த நீர்மூழ்கிக் கப்பல் கரைக்கு வந்திருந்தால், அதில் உள்ள போதைப்பொருட்களால் சுமார் 25,000 அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பார்கள் என்றும், இந்தத் தாக்குதலில் எந்த அமெரிக்கப் படைகளுக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் டிரம்ப் உறுதி செய்துள்ளார்.
கப்பலில் போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் இருந்தனர், இந்தத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். எஞ்சிய இருவர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்காக அவர்களின் சொந்த நாடுகளான ஈக்குவடோர் மற்றும் கொலம்பியாவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
“எனது கண்காணிப்பின் கீழ், நிலம் அல்லது கடல் வழியாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தும் பயங்கரவாதிகளை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது” என்று டிரம்ப் தனது பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் விதமாக, கரீபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்திய வெனிசுலா நாட்டுப் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 27 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
