பொழுதுபோக்கு
வெறும் 50 ரூபாய் டிக்கெட்… 30 வருசமாக தியேட்டரில் ஓடும் இந்தப் படம்; எங்கே தெரியுமா?
வெறும் 50 ரூபாய் டிக்கெட்… 30 வருசமாக தியேட்டரில் ஓடும் இந்தப் படம்; எங்கே தெரியுமா?
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு திரைப்படம் திரைக்கு வந்த ஒரு மாதத்தில் ஓ.டி.டி தளங்களில் வெளியாகிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், பெரும்பாலான ரசிகர்கள் ஓ.டி.டி-களில் திரைப்படங்களை பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்திலும் உள்ளனர். ஆனால், முன்பு அப்படி இல்லை ஒரு திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்றால் திரையரங்கிற்கு தான் செல்ல வேண்டும். அதிலும், நட்சத்திர நடிகர்களின் படங்கள் 100 நாட்கள் கடந்து ஓடும். அதற்கு வெள்ளி விழாவும் கொண்டாடப்படும். இப்படி இருந்த ரசிகர்கள் தற்போது ஓ.டி.டி-யில் சினிமாவை பார்த்து ரசிக்கின்றனர்.இப்படி சினிமாவை பார்க்க என்னதான் வசதிகள் வந்தாலும் ஒரு திரைப்படம் 30 ஆண்டுகளாக தொடர்ந்து திரையரங்கு ஒன்றில் திரையிடப்பட்டு வருகிறது. அந்தப் படத்துக்கான மவுசு இன்றைய தலைமுறையிடமும் குறையவில்லை. அதே சமயம் அந்த திரையரங்கில் டிக்கெட் விலை ரூ.50 மற்றும் ரூ.30 தான். இப்படி வெறித்தனமான ரசிகர்களை கொண்ட படம் எது? அந்த படம் எங்கு திரையிடப்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.கடந்த 1995-ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘தில் வாலே துல் ஹனியா லே ஜாயேங்கே’ என்ற படம் தான் அது. ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் யாஷ் சோப்ரா தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் கஜோல் கதாநாயகியா நடித்துள்ளார். அம்ரீஷ் புரி, ஃபரிதா ஜலால், அனுபம் கெர், கரண் ஜோஹர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜதின் – லலித் இருவரும் இணைந்து இசையமைத்தனர். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. இன்றளவும் ஏராளமானோருக்கு இப்படத்தின் பாடல் ஃபேவரைட்டாக உள்ளது. அந்த காலத்தில் ரூ.4 கோடியில் உருவான இந்தப் படம் ரூ.100 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்துக்கு தேசிய விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ‘தில் வாலே துல் ஹனியா லே ஜாயேங்கே’ திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.இந்நிலையில், இன்றும் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் என்ற திரையரங்கில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு படம் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பழைய சீட்டுகள் கொண்ட அந்த திரையரங்கில் பால்கனி டிக்கெட் 50 ரூபாய், வழக்கமான சீட் 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. படம் வெளியான முதல் நாள் தொடங்கி இன்று வரை கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் காலை 11.30 மணியளவில் படம் திரையிடப்படுகிறது. 2015-ம் ஆண்டு படத்தை நிறுத்த திரையரங்க நிர்வாகம் திட்டமிட்ட நிலையில், ரசிகர்கள் எதிர்ப்பு காரணமாக தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது. இந்த படத்தை காதலர்கள், ரசிகர்கள், புதுமண தம்பதிகள் அனைவரும் இன்று வரை பார்த்து ரசித்து வருகின்றனர்.
