பொழுதுபோக்கு
கதை மீண்டும் எழுதிய தனுஷ்… ஆனாலும் ராயன் படத்தில் நடிக்க முடியல: கவலை தெரிவித்த பிரபல நடிகர்
கதை மீண்டும் எழுதிய தனுஷ்… ஆனாலும் ராயன் படத்தில் நடிக்க முடியல: கவலை தெரிவித்த பிரபல நடிகர்
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இதுவே இயக்குநர் சுசீந்திரனின் முதல் படம் ஆகும். இதைத்தொடர்ந்து, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி, லால் சலாம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து நடிகர் விஷ்ணு விஷால், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் ராட்சசன் 2 , கட்டா குஸ்தி 2 போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2010-ம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2018-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2021-ம் ஆண்டு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை, திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. பாலிவுட் நடிகர் அமீர்கான் அந்த குழந்தைக்கு ‘மிரா’ என பெயர் சூட்டினார். நடிகர் விஷ்ணு விஷால் தற்போது இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் ’ஆர்யன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன், மானசா சவுத்ரி உள்பட பலர் நடித்து உள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்து உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வருகிற 31-ந்தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ‘ஆர்யன்’ படத்தின் ப்ரொமோஷனின் போது தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்தில் தான் நடிக்க இருந்ததாக விஷ்ணு விஷால் கூறினார். அவர் பேசியதாவது, “ராயன் படத்தில் சந்தீப் கிஷனின் கதாபாத்திரத்தில் நான் நடிக்க இருந்தேன். அந்த கதாபாத்திரத்தை எனக்காக மீண்டும் எழுதச் சொன்னேன். தனுஷ் சார் உடனடியாக ஒப்புக்கொண்டார், எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும், எனக்கு தேதிகள் பிரச்சினைகள் இருந்தன, அதனால் நடிக்க முடியவில்லை” என்றார். முன்னதாக இதே கதாபாத்திரத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.தனுஷ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘ராயன்’. இந்த படத்தில் தனுஷ், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா பலமுரளி, காளிதாஸ், எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
