பொழுதுபோக்கு
சொந்த தெருவில் பிச்சை எடுத்தேன்; நான் மட்டுமல்ல… எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் எல்லோரும் தான்; வாலி சொன்ன உண்மை சம்பவம்!
சொந்த தெருவில் பிச்சை எடுத்தேன்; நான் மட்டுமல்ல… எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் எல்லோரும் தான்; வாலி சொன்ன உண்மை சம்பவம்!
தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த கவிஞர் வாலி, ஆரம்ப காலத்தில் பல இன்னல்களை சந்தித்துள்ள நிலையில், ஒரு வருடம் தனது வீட்டு திண்ணையிலேயே தங்கியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். அதேபோல் ஒரு கலக்கட்டத்தில் கண்ணதாசன் எழுத வேண்டிய ஒரு பாடல் கவிஞர் வாலிக்கு வந்தது அனைவரும் அறிந்த ஒரு தகவல்.அதே சமயம் வாலி வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் அவர், எழுத வேண்டிய ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு தேடிய கவிஞர் வாலி, வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், ஊருக்கு போகலாம் என்று முடிவு செய்தபோது, கண்ணதாசன் எழுதிய ”மயக்கமா கலக்கமா” என்ற பாடலை கேட்ட வாலி மதுரை செல்லும் எண்ணத்தை கைவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்துள்ளார்.அதன்பிறகு இதயத்தில் நீ படத்தில் தொடங்கி, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த கற்பகம் படத்தின் மூலம் பிரபலமாகி அசத்திய வாலி, எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். தனது வாழ்நாளின் இறுதிவரை வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்ட வாலி, தனது வாழ்க்கை அனுபவங்களை பல்வேறு பேட்டிகளில் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த வகையில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் அவர் சந்தித்த துயரங்கள் குறித்து கூறியுள்ளார்.அந்த பேட்டியில், சென்னையில் வாழ எனக்கு வசதி இல்லை. திருச்சி ஸ்ரீரங்கத்தில் எந்த வீட்டில் நானும் என் தாய் தந்தையும் வாழ்ந்துகொண்டு இருந்தோமோ அதே வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு பம்பாய் போய்விட்டான். தங்குவதற்கு இடம் இல்லாமல் அந்த வீட்டின் திண்ணையில் ஒரு வருடம் தங்கியிருந்தேன். எனது சொந்த தெருவிலே நான் பிச்சைக்காரனாக இருந்தேன். 1960-களில் எனக்கு மோசமான காலக்கட்டம். இப்போது இருக்கும் இந்த புகழுக்கு நான் பயங்கர விலை கொடுத்து இருக்கிறேன். எல்லோரும் அப்படித்தான். சிவாஜி, எம்.ஜி.ஆர், நாகேஷ் என எனக்கு தெரிந்தவர்கள் அனைவரும், மிகுந்த சிரமப்பட்டு, செத்து சுண்ணாம்பாக போய் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதை ஈஸியாக சொல்லிவிட முடியாது என்று கூறியுள்ளார்.
