தொழில்நுட்பம்
விண்வெளியில் 4,000 கண்ணாடிகள்: இரவு வானியலுக்கு ‘பேரழிவு’ என எச்சரிக்கும் நிபுணர்கள்!
விண்வெளியில் 4,000 கண்ணாடிகள்: இரவு வானியலுக்கு ‘பேரழிவு’ என எச்சரிக்கும் நிபுணர்கள்!
சிறு வயதில் கையிலுள்ள கண்ணாடியால் சூரிய ஒளியைப் பிரதிபலித்து விளையாடியதுண்டு. ஹாலிவுட் படங்களில் ஒரு சிறிய பிரதிபலிப்புக் கற்றை பாதாள அறையின் கதவைத் திறப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தக் கருத்தை விண்வெளியின் உச்சத்திற்கு கொண்டு சென்று, பூமிக்கு ‘இரவு’ என்பதே இல்லாமல் செய்யத் துடிக்கிறது ஒரு அமெரிக்க நிறுவனம். கலிபோர்னியாவைச் சேர்ந்த ரிஃப்ளெக்ட் ஆர்பிட்டல் (Reflect Orbital) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், புரட்சிகரமான திட்டத்தை முன்வைத்துள்ளது. அதுதான் 4,000 ராட்சத சூரிய ஒளிக் கண்ணாடிகளை விண்வெளியில் நிலைநிறுத்துதல்.இந்த ராட்சதக் கண்ணாடிகள், பூமிக்கு மேலே சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் (Sun-Synchronous Orbit) பறக்கும். அதாவது, பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட எல்லையில் இவை வட்டமிடும். பூமியில் ஒரு பகுதி இருளில் மூழ்கும் அந்தத் தருணத்தில், இந்தக் கண்ணாடிகள் சாய்ந்து, சூரிய ஒளியை அங்கே திருப்பி அனுப்பும். இதனால், அந்தப் பகுதியில் 5 கிலோமீட்டர் அகலமுள்ள மண்டலத்தில் இரவு நேரத்தில் பகல் வெளிச்சம் கிடைக்கும். அவசர காலங்களில் சுத்தமான மின் உற்பத்தியை அதிகரிக்க, விவசாயத்திற்கு உதவ, இரவு நேர வேலைகளுக்கு ஒளியூட்ட எனப் பல பயன்களுக்கு இது உதவும் என நிறுவனம் கூறுகிறது. அமெரிக்க விமானப்படையின் ஆதரவையும் பெற்றுள்ள இந்தத் திட்டம், அடுத்த ஆண்டு EARENDIL-1 என்ற சிறிய செயல்விளக்கப் பயணத்தைத் தொடங்கவுள்ளது.இந்தக் கண்டுபிடிப்பு ஒருபுறம் ஆச்சரியத்தை அளித்தாலும், உலகின் முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் சூழலியலாளர்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. வானியலாளர்கள் இது அதிர்ச்சிகரமான ஒளி மாசுபாட்டை உருவாக்கும் என எச்சரிக்கின்றனர். இந்த விண்வெளிக் கண்ணாடிகள், பௌர்ணமி நிலவை விட 4 மடங்கு அதிகப் பிரகாசத்துடன் ஒளியைப் பிரதிபலிக்குமாம். இதனால், இரவு வானில் வேகமாக நகரும் செயற்கை நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டு, தொலைநோக்கிகள் மூலம் பார்க்கப்படும் அறிவியல் டேட்டா மற்றும் படங்களை முற்றிலும் சிதைத்துவிடும்.சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களும் இதேபோல் கவலை கொள்கின்றனர். கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பகல்-இரவு சுழற்சிக்கு ஏற்பப் பரிணாமம் அடைந்த உயிரினங்களின் வாழ்க்கையை இது புரட்டிப் போடும். வலசை போகும் பறவைகள் முதல் இரவு நேரப் பூச்சிகள் வரை, வனவிலங்குகள் இயற்கையான இருளைச் சார்ந்தே வாழ்கின்றன. இந்தச் செயற்கை வெளிச்சம் அவற்றின் தூக்க முறைகள், வழிகாணல், உணவு தேடல் மற்றும் இனப்பெருக்கம் போன்ற அத்தியாவசியச் செயல்பாடுகளைச் சிதைத்துவிடும்.ஒளி ஒரு குறிப்பிட்ட பகுதியில் வைக்கப்பட்டாலும், அதன் பிரகாசம் சுற்றியுள்ள பகுதிகளில் பரவி, பல்லுயிர் அமைப்புகளுக்குப் பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும். ஏற்கெனவே அதிகரிக்கும் ஒளி மாசுபாட்டால் பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதையும், மனிதர்களுக்கு தூக்க கோளாறு ஏற்படுவதையும் நாம் காண்கிறோம். மேலும் ஆயிரக்கணக்கான ஒளி மூலங்களைச் சேர்ப்பது இந்தப் பாதிப்புகளை வேகப்படுத்தலாம்.ரிஃப்ளெக்ட் ஆர்பிட்டல் நிறுவனம், தாங்கள் உருவாக்கும் ஒளி “மென்மையானது, நிலவு போன்றது” என்றும், தேவையற்றபோது கண்ணாடிகள் திருப்பப்படும் என்றும் உறுதி அளிக்கிறது. ஆனால், விஞ்ஞானிகள் இதை ஏற்கவில்லை. மற்ற செயற்கைக்கோள்களில் வெளிச்சம் ஒரு பக்க விளைவு. ஆனால், இந்தப் புராஜெக்ட்டின் முக்கிய நோக்கமே பூமியை ஒளிரச் செய்வதுதான். இது விண்வெளியின் எதிர்காலப் பயன்பாடுகளுக்கு ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடுமோ? என கேள்வி எழுந்துள்ளது. எனவே, இத்திட்டத்தின் முழு அமைப்பை அங்கீகரிப்பதற்கு முன், அதன் தீவிர சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துக் கடுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
