பொழுதுபோக்கு
எத்தனையே ஆயிரம் பாட்டு பாடிருக்கேன், நான் கஷ்டப்பட்ட ஒரே பாட்டு இதுதான்; பாடகி எஸ்.ஜானகி ஓபன் டாக்!
எத்தனையே ஆயிரம் பாட்டு பாடிருக்கேன், நான் கஷ்டப்பட்ட ஒரே பாட்டு இதுதான்; பாடகி எஸ்.ஜானகி ஓபன் டாக்!
இந்தியாவின் புகழ்பெற்ற பாடகிகளில் ஒருவர் எஸ்.ஜானகி. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என 17 மொழிகளில் 40,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பல பாடல்களை அவரே எழுதி பாடியதாகவும் சொல்லப்படுகிறது. ‘ஜானகி அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் இவர் 1957-ஆம் ஆண்டு வெளியான ‘விதியின் விளையாட்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.பாடகி ஜானகியின் புகழ் ’சிங்கார வேலனே தேவா’ என்ற பாடலின் மூலம் உலகம் எங்கும் பரவியது. இதையடுத்து எக்கச்சக்கமான பாடல் வாய்ப்புகள் இவருக்கு குவிந்தது. தனது குரலால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் பாடகி ஜானகி அனைத்து வயதினருக்கும் ஏற்றார் போல் பாடல்களை பாடக் கூடிய வல்லமை படைத்தவர். 6 வயது குழந்தை முதல் 60 வயது கிழவன் என தனது குரலில் வித்தியாசம் காட்டி பாடும் திறமை கொண்டவர். ‘கண்ணா நீ எங்கே, வா வா நீ இங்கே’ என்ற பாடலில் 2 வயது குழந்தை போலவும், ‘காதலின் தீபம் ஒன்று’ பாடலில் இளம்பெண் குரல் போன்றும் பாடல்களை பாடியுள்ளார். இளம் வயதில் உதிரிப்பூக்கள் படத்தில் இடம்பெற்றிருந்த ‘போடா போடா போக்கை ‘ என்ற பாடலை முதியவர் குரலில் பாடி அசத்தியிருப்பார். இளையராஜாவின் இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார் . எம் எஸ்வி, ஏஆர் ரஹ்மான் என அன்று தொடங்கி இன்றைய தலைமுறை இசையமைப்பாளர் வரை பாடியுள்ளார். வசீகர குரல் மூலம் ரசிகர்களை மயக்கிய இவர் இரண்டு முறை தமிழ் பாடல்களுக்காகவும், ஒரு முறை மலையாளம் மற்றும் ஒரு முறை தெலுங்கு பாடலுக்கு என 4 தேசிய விருதை வென்றுள்ளார். பாடகி ஜானகிக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. மேலும், தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.இந்நிலையில் தான் பாடியதில் தனக்கு கடினமாக இருந்த பாடல் ஒன்றை பற்றி கூறியிருக்கும் வீடியோ ஜே.கே.வி மீடியா யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. ஜானகி, 1977-ஆம் ஆண்டு வெளியான ஹேமாவதி என்ற கன்னடத் திரைப்படத்தில் வெளியான ‘சிவா சிவா என்னட நாளிக்கே ஈகே’ என்ற பாடல் கடினமாக இருந்ததாக தெரிவித்தார். இந்த பாடலுக்கு எல். வைத்யநாதன் இசையமைத்திருந்தார். இந்தப் பாடல் மிகவும் சவாலானதாக இருந்ததற்குக் காரணம், இசையமைப்பாளர் இந்தப் பாடலை தோடி மற்றும் அபோகி ஆகிய இரண்டு வெவ்வேறு ராகங்களை ஒவ்வொரு மாற்று வரியிலும் மாறி மாறிப் பாடும் விதமாக அமைத்ததே ஆகும். ராகங்களின் இந்த நுட்பமான மற்றும் விரைவான மாற்றம் காரணமாக, இதை தனது திரை வாழ்க்கையின் “மிகவும் கடினமான பாடல்” என்று எஸ். ஜானகி குறிப்பிட்டுள்ளார்.
