இந்தியா
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? இரவு பணிக்கு தடைவிதித்த புதுச்சேரி அரசுக்கு எதிராக தி.மு.க மகளிரணி கண்டனம்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? இரவு பணிக்கு தடைவிதித்த புதுச்சேரி அரசுக்கு எதிராக தி.மு.க மகளிரணி கண்டனம்
இரவு நேரங்களில் பெண்கள் வேலை செய்ய தடைவிதித்த புதுச்சேரி அரசின் உத்தரவு, பிற்போக்குத்தனமானது மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனத் புதுச்சேரி திமுக மகளிரணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாலின சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டிய அரசே வேறுபாடுகளைக் கற்பிப்பது ஏற்புடையதல்ல என்றும், இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை பெண்களைப் பணியில் ஈடுபடுத்துவதைத் தடை செய்யும் இந்த உத்தரவு, பெண்களின் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பறிக்கும் மற்றும் அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை அழித்தொழிக்கும் அணுகுமுறையாகும். இது பாலின சமத்துவத்தை மீறுவதாகவும், பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக்குவதாகவும் அவர் சாடுகிறார்.தொழிலாளர்கள் சட்டம், 1948-இன் பழமையான விதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்த உத்தரவு, பெண்களுக்குச் சமஉரிமை (பிரிவு 14), பாலின சமத்துவம் (பிரிவு 15), மற்றும் தொழில் வாய்ப்புகளில் சமவாய்ப்பு (பிரிவு 16) ஆகியவற்றை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளை மீறுவதாக அமைகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் வசந்தா வழக்கில் (2017), பெண்களுக்கு இரவுப் பணி உரிமையை அங்கீகரித்துள்ள நிலையில், புதுச்சேரி அரசின் உத்தரவு இதற்கு முரணாக உள்ளது.ஐ.டி., உற்பத்தி, தொழிற்சாலைகள் மற்றும் பெரு நிறுவனங்களில் இரவுப் பணி தேவைப்படும் இடங்களில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் அழிக்கப்படும். இத்தடை, பெண்கள் உயர்பதவிகளுக்கு முன்னேற முடியாத சூழலை ஏற்படுத்தும். மேலும் இது பெண்களின் தலைமைத்துவத்தை அழித்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் கொள்கைகளுக்கும் எதிரானது. தேசிய அளவில் பெண்களின் தொழில் பங்கு ஏற்கனவே 25%க்கும் குறைவாக உள்ள நிலையில், இந்த உத்தரவு நிலைமையை மேலும் மோசமாக்கும்.நிறுவனங்கள் ஆண்களை மட்டும் நியமிக்க வேண்டியிருக்கும் என்பதால், உற்பத்தி குறைந்து, செலவு அதிகரிப்புக்கு வழிவகுக்கும். மேலும், புதுச்சேரி அரசே 2025 செப்டம்பரில் Shops and Establishments Act-ஐ திருத்தி இரவுப் பணியை அனுமதிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தத் தற்போதைய தடையின் தேவை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.பெண்களுக்கு இரவில் பாதுகாப்பு இல்லை என்று புதுச்சேரி அரசே உறுதி செய்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ள காயத்ரி ஸ்ரீகாந்த், ஆண்கள் இரவு வேலை செய்தால் அவர்களின் உடல்நலன் கெடாதா என்றும் வினவியுள்ளார். பணியிடத்தில் பாதுகாப்பு அளிக்க போஷ் சட்டம், 2013 மற்றும் இதர இடங்களில் காவல்துறையின் பங்களிப்பு இருக்கும்போது, பாதுகாப்பு எனச் சொல்லிப் பெண்ணை வீட்டில் முடக்கும் உத்தரவு இது என அவர் சாடியுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில், பெண்களுக்கு இலவசப் பேருந்து, இரவுப் பயணத்தின் போது பிரத்யேகமாக ‘காவலன் செயலி’, ‘தோழி விடுதி’, ‘புதுமைப் பெண் திட்டம்’ போன்ற திட்டங்களால், இந்தியாவில் 43% உழைக்கும் பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் என்று சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசை முன்மாதிரியாகப் பின்பற்ற வலியுறுத்தியுள்ளார்.புதுச்சேரி தொழிலாளர் துறை இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், அனைத்து இந்தியா கூட்டணி மகளிர் அணி மற்றும் மாதர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என அனைத்துப் பெண் அமைப்புகளும் இணைந்து இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
