இந்தியா
ஆந்திரப் பிரதேசத்தில் “மோந்தா புயல்” தாக்கியதில் இருவர் பலி!
ஆந்திரப் பிரதேசத்தில் “மோந்தா புயல்” தாக்கியதில் இருவர் பலி!
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் மோந்தா புயல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகியிருந்த தாழமுக்கம் நேற்று இரவு சூறாவளியாக கரையைக் கடந்தது. ”மோந்தா புயல்” ஆந்திராவின் காக்கிநாடா – மசூலிப்பட்டினம் இடையே அந்தர்வேதிபாளையம் என்னும் இடத்தில் கரையை கடந்தபோது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் இரு பெண்கள் உயிரிழந்ததுடன், ஐம்பதுக்கு மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சூறாவளி காரணமாக 107 ரயில்கள், 18 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, 1204க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 75000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழமுக்கம் வலுப்பெற்று நேற்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மோந்தா’ என பெயரிடப்பட்டிருந்தது.
நேற்று இரவு 8.40 மணியளவில் காக்கிநாடா அருகே அந்தர்வேதிப்பாளையம் என்னும் இடத்தில் புயல் கரையைக் கடக்கத் தொடங்கிய புயல் , கரையை முழுமையாக கடந்து முடிக்க நள்ளிரவு 1.30 மணி வரை எடுத்துக் கொண்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
