இந்தியா
ஆந்திர கோயில் கூட்ட நெரிசல்; பரிதமாக போன உயிர்கள்: 3 முக்கிய பிழைகள் அம்பலம்
ஆந்திர கோயில் கூட்ட நெரிசல்; பரிதமாக போன உயிர்கள்: 3 முக்கிய பிழைகள் அம்பலம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வரா கோவிலில் இன்று (நவம்பர் 1, 2025, சனிக்கிழமை) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 8 பெண்கள் மற்றும் 1 குழந்தையும் அடங்குவதாக பாலசா (Palasa) நகர துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா காசிபுக்கா வெங்கடேஸ்வரா கோவிலில், ஏகாதேசியை முன்னிட்டு இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு மாதமும் ஏகாதேசி தினத்தின்போது ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலில் கூடுவது வழக்கம். இன்றும் அவ்வாறே அதிகப்படியான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால், இந்தத் துயரமான கூட்ட நெரிசல் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.இந்தத் துயர நிகழ்வுக்குப் பின்னால், நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கக்கூடிய மூன்று முக்கிய குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பலசா (Palasa) நகர துணை போலீஸ் சூப்பிரண்டு, “இன்று பக்தர்களின் கூட்டம் அசாதாரணமான அளவில் இருந்தது. இந்தக் கோயில் தனிநபருக்குச் சொந்தமானது. அவர்கள் கோரிக்கை விடுத்தால் மட்டுமே பாதுகாப்புக்காகக் காவலர்களை அனுப்புவோம்” என்று தெரிவித்தார்.மூன்று முக்கியப் பாதுகாப்புக் குறைபாடுகள்1. கூட்டத்தை கட்டுப்படுத்தப் போதிய ஏற்பாடுகள் இல்லை (Crowd Control)”பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. ஆனால், அந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவில் நிர்வாகம் அதிகக் கூட்டத்தை எதிர்பார்த்த போதிலும், அதற்கு ஏற்றாற்போல் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்று முன்னாள் ஒய்.எஸ்.ஆர்.சி.பி எம்எல்ஏ சீதிரி அப்பலராஜு குற்றம் சாட்டியுள்ளார்.2. பொதுவான நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் (Entry and Exit Points)12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் வளாகத்தில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தனித்தனி வழிகள் அமைக்கப்படவில்லை. மக்கள் ஒரே நேரத்தில் உள்ளே நுழையவும், வெளியேறவும் முயன்றதால்தான் இந்த நெரிசல் ஏற்பட்டது, என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.3. தற்காலிகக் கட்டுமானங்கள் உடைந்தது (Makeshift Construction)கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதி கட்டுமானப் பணியில் இருந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த கைப்பிடிகள் (ரெய்லிங்ஸ்) மற்றும் தடுப்பு அமைப்புகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தன. “கூட்டம் அழுத்தம் கொடுத்தபோது, அந்தக் கட்டுமானங்கள் உடைந்தன. இதனால் மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்” என்று ஒரு அதிகாரி விளக்கினார்.ஆந்திர முதல்வர் இரங்கல் மற்றும் கடந்த கால விபத்துகள்”இத்துயர சம்பவத்தில் பக்தர்கள் உயிரிழந்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு விரைவான மற்றும் முறையான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்று அவர் கூறினார்.சந்திரபாபு நாயுடு, உள்ளூர் அதிகாரிகளையும் பொதுப் பிரதிநிதிகளையும் சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த ஆண்டிலேயே ஆந்திர மாநிலத்தில் நடக்கும் மூன்றாவது துயரமான கோயில் விபத்து இதுவாகும்:ஏப்ரல் 30: விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாசலம் வராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் அக்ஷய திருதி பண்டிகையின் போது, மழை காரணமாகப் புதிதாகக் கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.ஜனவரி 8: திருப்பதியில் ஏழுமலையானின் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை விநியோகிக்கும் இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!
