இலங்கை
நாளை ஐப்பசி மாத பௌர்ணமி ; சிவாலயங்களில் அன்னாபிஷேகம்; என்ன சிறப்பு தெரியுமா !
நாளை ஐப்பசி மாத பௌர்ணமி ; சிவாலயங்களில் அன்னாபிஷேகம்; என்ன சிறப்பு தெரியுமா !
ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று (5) சிவாலயங்களில் சாயரட்சையின்போது இந்த சிறப்பு வழிபாடு நடைபெறும்.
அவ்வகையில் நாளை (5) (புதன்கிழமை) சிவாலயங்களில் சாயரட்சையின்போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.
உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் சிவபெருமானுக்கு அரிசி உணவை அபிஷேகம் செய்து படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.
பௌர்ணமி அன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் முழுமையான அழகுடன் விளங்குகின்றான்.
அன்று அவனது கலை அமிர்த கலையாகும்.
அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.
சிதம்பரத்தில் தினமும் காலை 11 மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.
எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார்.
ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாலையில் சிவபெருமானின் திருமேனி முழுவதும் அதாவது லிங்கத்திருமேனி முழுவதும் மறையும் அளவிற்கு அன்னத்தை சாற்றுவார்கள்.
இது அன்னாபிஷேகம் எனப்படுகின்றது.
பின் இரண்டாம் காலம் வரை ( மாலை 6.00 மணியில் இருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக அருட்காட்சி தருவார். இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது.
லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தை விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுப்பார்கள்.
மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப்படும். சிவபெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.
இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு குறைவு இருக்காது.
அன்னாபிஷேகத்தன்று சிவபெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை சோறும் ஒரு சிவலிங்கம் என்று கருதப்படுகிறது.
எனவே அன்று அன்னாபிஷேக கோலத்தில் சிவதரிசனம் செய்தால் கோடி லிங்கத்தை தரிசனம் செய்வதற்கு சமம் ஆகும்.
இதையே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றும் கூறுவார்கள்.
அன்னாபிஷேக கோலத்தில் சிவபெருமானை தரிசிக்க மோட்சம் கிட்டும். அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
