தொழில்நுட்பம்
செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ இது தான் வழி… நச்சுக்காற்றை எரிபொருளாக மாற்ற விஞ்ஞானிகள் திட்டம்!
செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ இது தான் வழி… நச்சுக்காற்றை எரிபொருளாக மாற்ற விஞ்ஞானிகள் திட்டம்!
எதிர்காலத்தில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேறினால், அவர்களுக்குத் தேவையான மின்சாரம், எரிபொருளுக்கு என்ன செய்வது? பூமியிலிருந்தே அனைத்தையும் கொண்டு செல்ல முடியுமா? இந்தப் பெரிய கேள்விக்கு, பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக (UBC) விஞ்ஞானிகள் புத்திசாலித்தனமான பதிலைக் கண்டுபிடித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தின் கொடூரமான குளிரையும், அதன் நச்சுக் காற்றையுமே (CO2) நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மின்சாரம் மற்றும் எரிபொருளைத் தயாரிக்க முடியும் என்கிறார்கள் அவர்கள்!விஞ்ஞானிகள் பயன்படுத்தும் இத்தொழில்நுட்பத்தின் பெயர் “வெப்பமின்னியல் ஜெனரேட்டர்கள்” (Thermoelectric Generators). இதன் செயல்பாடு மிகவும் எளிமையானது. ஒரு கருவியின் ஒரு பக்கம் சூடாகவும், மறுபக்கம் மிகவும் குளிராகவும் இருந்தால், அந்த வெப்பநிலை வேறுபாட்டை (Temperature Difference) இந்த ஜெனரேட்டர்கள் நேரடியாக மின்சாரமாக மாற்றும். ஆராய்ச்சியில், இரு பக்கங்களுக்கும் இடையே குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் வேறுபாடு இருந்தாலே, ஒரு இயந்திரத்தை இயக்கத் தேவையான மின்சாரம் கிடைப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலை பகலில் 20°C ஆக இருந்தாலும், இரவில் -153°C வரை உறைந்துபோகும். செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் 95% கார்பன் டை ஆக்சைடு (CO2) தான் உள்ளது. மனிதர்கள் வாழ, செவ்வாய் கிரகத்தில் “பயோடோம்” (Biodome) எனப்படும் மூடப்பட்ட கண்ணாடிக் கூடங்கள் அமைக்கப்படும். அதன் உள்ளே, நமது அறை வெப்பநிலை (Room Temperature) பராமரிக்கப்படும். இப்போது, அந்தக் கூடத்தின் வெளிப்புறச் சுவரில் இந்த “வெப்பமின்னியல் ஜெனரேட்டரை” பொருத்தினால் போதும். உள்ளே சூடான அறை (+20°C), வெளியே உறைபனி நிலை (-153°C). இந்த மாபெரும் வெப்பநிலை வேறுபாட்டைப் பயன்படுத்தி, ஜெனரேட்டர்கள் தானாகவே 24 மணி நேரமும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.இந்த மின்சாரத்தை வைத்துதான் மேஜிக்கே நடக்கிறது. இந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி “எலக்ட்ரோலைசர்” என்ற கருவியை இயக்குவார்கள். அந்தக் கருவி, செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் இருந்து 95% CO2 காற்றை உறிஞ்சி, அதை வேதியியல் ரீதியாகப் பிரித்து, கார்பன் மோனாக்சைடு (CO) போன்ற பயனுள்ள பொருட்களாக மாற்றும். இந்த CO-வை அடிப்படையாக வைத்து, செவ்வாய் கிரகத்திலே எரிபொருட்கள், ரசாயனங்கள் ஏன் பிளாஸ்டிக் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கூட உருவாக்க முடியும்! இந்த ஆய்வுக் கட்டுரை, ‘டிவைஸ்’ (Device) என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.
