தொழில்நுட்பம்
ஆப்டிகல் இல்லூஷன்? அமானுஷ்யமா?.. பூமியில் ‘கிராவிட்டி’ வேலை செய்யாத 5 மர்ம இடங்கள்!
ஆப்டிகல் இல்லூஷன்? அமானுஷ்யமா?.. பூமியில் ‘கிராவிட்டி’ வேலை செய்யாத 5 மர்ம இடங்கள்!
“கிராவிட்டி” (Gravity) இந்த ஒற்றைச் சக்திதான் நம்மைக் காலில் இருந்து தலை வரை தரையோடு பிடித்து வைத்திருக்கிறது; பூமியில் உயிர்கள் நிலையாக இருக்கவும் இதுதான் காரணம். ஆனால், இந்த பூமியிலேயே, இயற்பியல் விதிகள் எல்லாம் தலைகீழாக மாறிப்போகும் சில விசித்திரமான, மர்மமான இடங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த இடங்களில், கார்கள் தானாகவே மேட்டை நோக்கி ஓடுகின்றன, தண்ணீர் பின்னோக்கிப் பாய்கிறது, ஏன்… மனிதர்கள் கூட கீழே விழாமல் நம்ப முடியாத கோணங்களில் சாய்கிறார்கள்!”இதெல்லாம் வெறும் ‘ஆப்டிகல் இல்லூஷன்’ (Optical Illusion) பாஸ்!” என்று விஞ்ஞானிகள் சொன்னாலும், அந்த இடங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மமும், அங்கு கிடைக்கும் அனுபவமும் குறையவே இல்லை. தங்கள் மனதையே தற்காலிகமாகப் புரட்டிப் போடும் இந்த அமானுஷ்ய அனுபவத்திற்காகவே சுற்றுலாப் பயணிகள் இந்தக் “கிராவிட்டி” இல்லாத இடங்களுக்குப் படையெடுக்கிறார்கள். இதோ, கிராவிட்டி தோற்றுப் போகும் அந்த 5 இடங்கள்.1. மேக்னடிக் ஹில் (இந்தியா)நம்ம ஊர் லே-கார்கில் நெடுஞ்சாலையில் இருக்கிறது இந்த மர்ம மலை. இங்கே, நீங்க உங்கள் காரை ‘நியூட்ரல்’ கியரில் நிறுத்திப் பாருங்கள்… ஆச்சரியம்! கார், தானாகவே மேடான பகுதியை நோக்கி மேலே ஏறும்! ஏதோ ஒரு மர்ம சக்தி இழுப்பது போலவே இருக்கும். இது மலையின் ‘காந்த சக்தி’ என்று உள்ளூர் மக்கள் சொன்னாலும், விஞ்ஞானிகள் இதை ‘பார்வைப் பிழை’ என்கிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும், இந்த அமானுஷ்ய அனுபவத்தைச் சோதித்துப் பார்க்காமல் எந்த பயணியும் இந்த இடத்தைக் கடந்து செல்வதில்லை.2. மிஸ்டரி ஸ்பாட் (அமெரிக்கா)பெயரிலேயே ‘மர்மம்’ இருக்கிறது. 1939-ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இடம், அமெரிக்காவின் பிரபலமான டூரிஸ்ட் ஸ்பாட். இங்கே “கிராவிட்டி” சுத்தமாக இல்லை. உள்ளே சென்றாலே தலைசுற்றும், கீழே விழாமலேயே நீங்க சாயலாம், பந்துகள் தானாகவே மேட்டை நோக்கி உருண்டு ஓடும். இவையெல்லாம் சாமர்த்தியமாக வடிவமைக்கப்பட்ட ‘மாயை’ என்று விஞ்ஞானிகள் சொன்னாலும், இந்த மாயாஜாலத்தைக் காண ஆண்டுக்கு 1,50,000 பேர் வருகிறார்கள். வளைந்த சுவர்களுக்குள் நடப்பவர்களை இது இன்றும் ஆச்சரியத்தில் உறைய வைக்கிறது.3. கிராவிட்டி ஹில் (அமெரிக்கா)பென்சில்வேனியாவில் உள்ள இந்த இடமும் அதே ரகம்தான். நியூட்ரலில் நிறுத்தப்படும் கார்கள், கிராவிட்டியை எதிர்த்து தானாகவே மேட்டில் ஏறுகின்றன. இந்த விசித்திரத்தைச் சோதிக்க வரும் மக்கள், அந்த இடத்தைக் கோடு கிழித்து, அடையாளமே போட்டு வைத்திருக்கிறார்கள். இதற்கும் காரணம், சுற்றியுள்ள நிலப்பரப்பு நமது கண்களை ஏமாற்றும் ஒரு ‘பார்வைப் பிழை’ தான்!4. ஸ்பூக் ஹில் (அமெரிக்கா)’ஸ்பூக்’ என்றால் ‘பயமுறுத்தும்’ என்று அர்த்தம். பெயருக்கு ஏற்றபடியே, புளோரிடாவில் உள்ள இந்த இடத்தைச் சுற்றி ஏகப்பட்ட பேய்க் கதைகள் உலவுகின்றன. பூர்வீகத் தலைவருக்கும் ஒரு ராட்சத முதலைக்கும் நடந்த ஆவிக் போரால் இங்குள்ள இயற்கையின் சக்தி பாதிக்கப்பட்டுவிட்டதாக ஒரு நாட்டுப்புறக் கதையே உண்டு. இங்கும் கார்கள் மேட்டை நோக்கித்தான் ஓடுகின்றன. இதுவும் ‘இல்லூஷன்’ தான் என்றாலும், அந்தப் பெயரும், கதையும்தான் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் மீண்டும் வரவழைக்கிறது.5. தங்கப் பாறை (மியான்மர்)இதுதான் எல்லாவற்றிற்கும் உச்சம்! மியான்மரில் உள்ள இந்த ‘தங்கப் பாறை’ (Golden Rock), கிராவிட்டியை அப்பட்டமாக மீறி நிற்கும் ஒரு ஆன்மீக அற்புதம். இந்த பிரம்மாண்டமான, தங்கம் பூசப்பட்ட பாறை, ஒரு மலையின் நுனியில், எந்த நேரமும் கீழே விழுந்துவிடும் அபாயத்தில் நிற்பது போல் தோன்றும். ஆனால், பல நூற்றாண்டுகளாக அது அப்படியே அசையாமல் நிற்கிறது. புத்தரின் ஒரு ஒற்றை முடியால்தான் இந்தப் பாறை கீழே விழாமல் நிற்பதாக மக்கள் நம்புகிறார்கள். இது ஒரு புனிதத் தலமாகவும் விளங்குகிறது. நம்பிக்கைக்கும் இயற்பியலுக்கும் இடையில் நடக்கும் ஒரு போராட்டமாக, இந்தத் தங்கப் பாறை மியான்மரின் மர்மமான அடையாளமாக நிற்கிறது.
