இலங்கை
சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
நாட்டின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டல் குழுவை நிறுவுவதற்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
நாட்டின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் விசேட கலந்துரையாடல் சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அடுத்த 10ஆண்டுகளுக்கு (2026-2035) செயல்படுத்தப்படவுள்ள தேசிய சுகாதாரக் கொள்கைக்கு ஏற்ப நாட்டின் இலவச சுகாதார சேவையை டியிட்டல் மயப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்காக பின்பற்ற வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
டிஜிட்டல் மயமாக்கலுக்கான கட்டமைப்பை நிறுவுதல், டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சர்வதேச ஆதரவுடன் முக்கிய திட்டங்களை செயல்படுத்துதல், டிஜிட்டல் மாற்றத்திற்கான தேவைகள், கருத்துக்கள் குறித்து இங்கு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
மனித வள மேம்பாடு மற்றும் இந்தப் பணியை திறம்படச் செய்வதற்குத் தேவையான பயிற்சி குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பான திட்டவரைபை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் துணை இயக்குநர் மருத்துவர் அர்ஜுன திலகரத்ன சமர்ப்பித்தார்.
சுகாதார துணை அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி, டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர் எரங்க வீரரத்ன, மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் மருத்துவர் ஹான்ஸ் விஜேசூரிய, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, அமைச்சின் மேலதிக செயலாளர்கள், துணை இயக்குநர்கள் நிபுணர்கள் என பலர் இந்த விசேட கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
