உலகம்
தென் கொரியாவில் இலங்கை தொழிலாளர்கள் இருவர் பலி !
தென் கொரியாவில் இலங்கை தொழிலாளர்கள் இருவர் பலி !
தென் கொரியாவில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டியில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது.
மீன் பண்ணை ஒன்றின் நீர் தொட்டிக்குள் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு கியோங்சாங் பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20 மற்றும் 30 வயதுடைய இலங்கையர்களும் 50 வயதான கொரிய மேற்பார்வையாளர் ஒருவர் என மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 8:30 மணியளவில் இளம் மீன் இனப்பெருக்க பிரிவுகளுக்கு தண்ணீர் வழங்கப் பயன்படுத்தப்படும் பெரிய நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
4மீற்றர் அகலமும், 3மீற்றர் நீளமும் மற்றும், 2 மீற்றர் ஆழமும் கொண்ட தொட்டி தண்ணீரில் நிரப்பப்பட்டிருந்தது . குறுகிய திறப்பு மற்றும் ஏணி வழியாக மட்டுமே இந்த நீர் தொட்டியை அணுகக்கூடியதாக இருந்தது. மேற்பார்வையாளரின் குடும்பத்தினர் இரவு 7:38 மணிக்கு அவர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.
இலங்கைத் தொழிலாளர்களில் ஒருவர், பணி சீருடையில் இருந்ததாகவும் மற்ற இருவரும் வழக்கமான உடையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தொழில்துறை விபத்துக்கான சாத்தியத்தை அதிகாரிகள் நிராகரிக்கவில்லை, மேலும் உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றார்களா? அல்லது வேறு பணியில் ஈடுபட்டிருந்தார்களா? என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
