உலகம்
பைடனின் பதவிக் கால இறுதிக்குள் காஸா போர் முற்றுப்பெறும்

பைடனின் பதவிக் கால இறுதிக்குள் காஸா போர் முற்றுப்பெறும்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முடிவடைவதற்குள், காஸாவில் போர் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பலஸ்தீனத்தின் காஸாவைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. காஸாவில் இதுவரை 44 ஆயிரத்து 282 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சூழலில் எகிப்து அரசின் சமரசத்தின் பேரில் இஸ்ரேல் – காஸா இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எகிப்து அரசின் உயர்நிலைக் குழு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 7-ம் திகதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 254 இஸ்ரேலியர்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதில் 154 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னமும் 100 பேர் ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளனர். அவர்களை விடுவிக்க, இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,000 ஹமாஸ் தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இவை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்து ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கையில், “லெபனான் உடன் எந்த நிபந்தனையும் இன்றி இஸ்ரேல் அரசு போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. காஸாவிலும் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த விரும்புகிறோம். ஆனால், இஸ்ரேல் அரசு போர் நிறுத்தத்தை விரும்பவில்லை” என்றன.
இது குறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில்,
“தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் ஜனவரியில் முடிவடைகிறது. அதற்குள் காஸாவில் போர் நிறுத்தம் அமுலாகும். இது தொடர்பாக இஸ்ரேல் அரசு – காஸா நிர்வாகம் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்றன.