திரை விமர்சனம்
மிஷின்: திரை விமர்சனம்
மிஷின்: திரை விமர்சனம்
[புதியவன்]
கோவையில் வசிக்கும் அருண் விஜய், தன் மகள் இயல் சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார். இதற்காக அவர் பல லட்ச ரூபாய் திரட்டுகிறார். அவ்வளவு பணத்தையும் நேரடியாக லண்டன் கொண்டு செல்ல முடியாது என்பதால், அதை இங்கு ஒருவரிடம் கொடுத்து, பணத்தை லண்டனில் பெற்றுக்கொள்வதற்காக ரூபாய் நோட்டு ஒன்றை அடையாளமாகப் பெறுகிறார். லண்டனிலுள்ள மருத்துவமனையில் இயல் ஆபரேஷனுக்கு தேதி குறிக்கப்படுகிறது. அங்கு பணியாற்றும் கேரள நர்ஸ் நிமிஷா சஜயன், அருண் விஜய் மற்றும் இயலுக்கு உதவுகிறார்.
அப்போது திடீரென்று கொள்ளை கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் அருண் விஜய், ஓடும் பேருந்தில் அவர்களை கடுமையாக தாக்குகிறார். அதைப் பார்த்த லண்டன் போலீசார் அருண் விஜய்யை குற்றவாளி என்று நினைத்து கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். தனது தரப்பு வாதத்தை யாரும் கேட்காத நிலையில், மகளின் ஆபரேஷனுக்காக பணத்தைக் கொடுக்க முடியாமல் அருண் விஜய் தவிக்கிறார். இந்நிலையில், சிறையை ஹேக் செய்யும் தீவிர வாத கும்பல் ஒன்று, அங்குள்ள தங்களது ஆட்களை தப்பிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதை சிறைத்துறை அதிகாரி எமி ஜாக்சன் தடுக்க முயற்சிக்கிறார். அவரால் முடியாத நிலை யில், அருண் விஜய் அதிரடியாக களம் இறங்குகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
ஒருபுறம் மகளின் சிகிச்சை, மறுபுறம் செய்யாத குற்றத்துக்காக சிறை தண்டனை, இன்னொரு புறம் தீவிரவாத தாக்குதல் என்று, மும்முனை தாக்குதலை அருண் விஜய் என்ற தனி நபர் சமாளித்து, படத்தை தன் தோள்மீது சுமந்துஇருக்கிறார். ஆக்ஷன் அவருக்கு கைவந்த கலை என்பதால், சில சண்டைக் காட்சிகளில், குறிப்பாக சிறைக்குள் நடக்கும் சண்டையில் பொளந்து கட்டியிருக்கிறார். மகள் மீதான பாசத்தில் உருகவும் வைக்கிறார். அவரது கேரியரில் முக்கியமான படம் இது. தமிழ் பேசும் லண்டன் போலீஸ் அதிகாரியாக எமி ஜாக்சன் மிடுக்கு காட்டியுள்ளார். இயலை காப்பாற்றும் விஷயத்தில் நிமிஷா சஜயன் பதற வைத்தி ருக்கிறார்.
கேமராவை பார்த்து வசனம் பேசும் தீவிரவாதி பரத் போபண்ணா, சர்தாராக வரும் அபி ஹாசன், வார்டு பாய் விராஜ் தங்களுக்கான பணியை சிறப்பாக செய்துள்ளனர். சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு, ஆக்ஷன் காட்சிகளில் கூடுதலாகவும், கடுமையாகவும் உழைத்து இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு மிகப்பெரிய பலம். ஹவாலா பணம் எப்படி கைமாற்றப்படுகிறது என்பதை விரிவாக காட்டியுள்ளனர். லாஜிக்கே இல்லாத சில காட்சிகளால் இந்த ஆக்ஷன் படத்தை இயக்கியுள்ள ஏ.எல்.விஜய், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். [எ]