விளையாட்டு
யாழ் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை பரிசளித்த சங்கக்கார
யாழ் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை பரிசளித்த சங்கக்கார
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார சங்கக்கார, தம்புள்ளை கனிஸ்ட அணியின் ரஞ்சித்குமார் நியூட்டன், கே. மாதுலன், வி. ஆகாஸ் மற்றும் ஏனைய வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை பரிசளித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணத்தின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பிரதேச இளைஞர் தெரிவு இணைப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ரஞ்சன் பரணவிதானவின் வேண்டுகோளுக்கிணங்க இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நியூட்டன் மற்றும் மாதுலன் ஆகியோர் தற்போது ஆசியக் கிண்ணத்தின் இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, ஆகாஸ் பங்களாதேஸ் தொடருக்கான 17 வயதுக்குட்பட்ட அணியில் இணைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ரஞ்சித்குமார் நியூட்டன், சென்.ஜோன்ஸ் கல்லூரியின் வலது கை ஸ்லிங்கர் கே.மாதுலன் மற்றும் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் வலது கை சுழற்பந்து வீச்சாளர் வி.ஆகாஸ் ஆகியோர் இந்த முன்னேற்றங்களின் மூலம் சாதனை படைத்துள்ளனர்.
இலங்கையின் தேசிய இளைஞர் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என்பதுடன் சில வருடங்களுக்கு முன்னர் யாழ் மத்திய கல்லூரியின் மாணவனான வியாஸ்காந்தும் தேசிய இளைஞர் அணிக்காக விளையாடி பெருமை பெற்றுத்தந்தமையும் குறிப்பிடத்தக்கது.