திரை விமர்சனம்

ஹனு-மான் – திரைவிமர்சனம்

Published

on

ஹனு-மான் – திரைவிமர்சனம்

[புதியவன்]

சாதாரணமான ஒரு ஹீரோவுக்கு திடீரென்று தெய்வ சக்தியுடன் கூடிய பலம் கிடைத்தால் என்ன நடக்கும் என்ற அதீத கற்பனையுடன் உருவாகியுள்ள பான் இந்தியா படம், ‘ஹனு-மான்’. கற்பனை கிராமமான அஞ்சனாத்திரியில் வசிக்கும் துறுதுறு இளைஞன், தேஜா சஜ்ஜா. பெற்றோர் இல்லாததால், தனது அக்கா வரலட்சுமியின் பாசத்துக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வருகிறார். எந்த வேலைக்கும் செல்லாத அவருக்கும், டாக்டருக்குப் படித்துவிட்டு ஊர் திரும்பும் அம்ரிதா அய்யருக்கும் சிறுவயதில் இருந்தே காதல். இந்நிலையில், சிறுவயதில் இருந்தே சூப்பர் ஹீரோவாக ஆசைப்படும் வில்லன் விநய் ராய், அதற்காக தன் பெற்றோரையே தீவைத்துக் கொளுத்தியவர். இறுதியில் அவர் தனது லட்சியத்தில் வென்றாரா? அவரால் ஏற்படும் ஆபத்து என்ன? ஹனுமன் சக்தி பெற்ற ஹீரோ தேஜா சஜ்ஜா, விநய் ராயை என்ன செய்து அஞ்சனாத்திரி கிராமத்தைக் காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.

Advertisement

விஎப்எக்ஸ் மற்றும் சிஜியை நம்பி களத்தில் குதித்த படக்குழு, அதில் 90 சதவீதம் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக, ஆற்றில் அமைந்திருக்கும் மலையில், மிகப் பிரமாண்டமான ஹனுமன் சிலை பிரமிப்பு ஏற்படுத்துகிறது. கிளைமாக்ஸ் காட்சி மற்ற படங்களுக்கு சவால் விடுகிறது. இக்கதையில் ஆன்மிகத்தையும், பேண்டசியையும் கலந்து, விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் பல குறைகளை மறக்க வைத்து இயக்கியுள்ளார், பிரசாந்த் வர்மா. இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா காதல், காமெடி, ஆக்‌ஷன், ஆன்மிகம் என்று பல்வேறு உணர்வுகளை சட்டென்று வெளிப்படுத்தி நடித்துள்ளார். அவரது சகோதரி வரலட்சுமி, வில்லன் விநய் ராய், அம்ரிதா அய்யர், கெட்டப் னு, வெண்ணிலா கிஷோர் ஆகியோரின் நடிப்பு கச்சிதமாக இருக்கிறது. படம் முழுக்க வரும் குரங்குக்கு ரவிதேஜா டப்பிங் பேசியிருப்பதும், அது பேசும் டைமிங் காமெடி டயலாக்குகளும் நல்ல என்டர்டெயின்மெண்ட்.

அஞ்சனாத்திரி கிராமம், அங்குள்ள மக்கள், ஹனுமன் சிலை என்று ஒவ்வொரு விஷயத்தையும் விஎப்எக்ஸ் மூலம் செதுக்கிய இயக்குனர், கதையை வழக்கமான பாணியில் அமைத்திருப்பது மைனஸ் என்றாலும், அதை படத்திலுள்ள நடிகர்களும், சிஜி காட்சிகளும் சமன் செய்துவிடுகின்றன. தாசரதி சிவேந்திரன் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் அவரது கேமரா அசுரத்தனமாக உழைத்திருக்கிறது. அனுதீப் தேவ், கவுரஹரி, கிருஷ்ணா சவுரப் ஆகியோரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு பலம் சேர்த்துள்ளன. நம்ப முடியாத கதையும், காட்சிகளும் இருந்தாலும், பின்னணியில் ஹனுமன் சக்தியை வைத்து, நம்பகத்தன்மையை வரவழைத்த விதத்தில் இயக்குனரின் கூடுதல் உழைப்பு தெரிகிறது. பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின் முதல் படமான ‘ஹனு-மான்’, இன்னும் பல பாகங்களை உருவாக்கும். [எ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version