விளையாட்டு
IPL Auction 2025: தேசிய அணியில் இடம்.. ஆனால் ஐபிஎல் ஏலத்தில் சோகம் – முதல் Unsold வீரரான 24 வயது பேட்ஸ்மேன்!
IPL Auction 2025: தேசிய அணியில் இடம்.. ஆனால் ஐபிஎல் ஏலத்தில் சோகம் – முதல் Unsold வீரரான 24 வயது பேட்ஸ்மேன்!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 367 இந்திய வீரர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 577 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஏலத்தின் முதல் நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ. 467.95 கோடியை வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்காக அணிகள் செலவு செய்துள்ளது. நேற்று 84 வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டார்கள். அவர்களில் 72 வீரர்கள் ஐபிஎல் அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்கள். மீதம் உள்ள 12 பேரை எடுக்க நேற்று எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.
அவர்களில் ஒருவர் இந்திய இளம் வீரர் தேவதத் படிக்கல். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஒரு கட்டத்தில் அதிரடியை குவித்து பிரபலமான தேவதத் படிக்கலை, நேற்றைய ஏலத்தில் எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டவில்லை ஆச்சரியமாக இருந்தது.
இத்தனைக்கு ஐபிஎல் ஏலம் நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் இந்திய தேசிய அணிக்காக இடம் பெற்றிருந்தார் தேவதத் படிக்கல். தேசிய அணியில் இடம் கிடைத்தும், ஐபிஎல் ஏலத்தில் அணிகள் அவரை வாங்க முன்வரவில்லை.
இதில் கூடுதல் சோகம் என்னவென்றால், நேற்று நடந்த ஐபிஎல் 2025 ஏலத்தின் முதல் Unsold வீரரும் இவரே. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 123 ஸ்டிரைக் ரேட்டில் 1,500 ரன்களை ஐபிஎல் தொடரில் எடுத்திருக்கும் படிக்கல், 2021-இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக செயல்பட்டார். இது அவரின் சிறந்த சீசனாக அமைந்தது.
இதன் காரணமாக, 2019-ல் ரூ.20 லட்சம் என்கிற அடிப்படை விலையில் ஆர்சிபி சென்ற அவரை 2022-ல் ரூ.7.75 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி 7 போட்டிகளில் 38 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த பார்ம் அவுட் காரணமாக அவரை ஏலத்தில் யாரும் வாங்க முன்வரவில்லை எனத் தெரிகிறது. அடிப்படை விலையாக அவருக்கு ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடக்கவுள்ள இரண்டாவது நாள் ஏலத்தில் அவரை அணிகள் வாங்க முன்வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.