உலகம்
Maharastra Election Results | மகாராஷ்டிராவில் அமைச்சராகும் முதல் தமிழர்? யார் இந்த தமிழ்செல்வன்?
Maharastra Election Results | மகாராஷ்டிராவில் அமைச்சராகும் முதல் தமிழர்? யார் இந்த தமிழ்செல்வன்?
மகாராஷ்டிராவின் சயான் கோலிவாடா தொகுதியில் 3-வது முறையாக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன். வெளிநாட்டுக்கு செல்லும் கனவோடு மும்பைக்கு சென்று ஏமாற்றப்பட்டவர், தற்போது அம்மாநிலத்தின் அமைச்சராகலாம் என்று பேசப்படுகிறது. யார் இந்த தமிழ்ச்செல்வன்? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
மும்பையில் மட்டுங்கா, சயான், ஆன்டோப் ஹில், தாராவி உள்ளிட்ட இடங்களை ஒரு மினி தமிழ்நாடு என்றே கூறலாம். அந்த அளவிற்கு லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கும் இந்தப் பகுதிகளில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரமணியம் என்ற ஒரே ஒரு தமிழர் மட்டும் எம்எல்ஏ-வாக இருந்தார். அதன்பிறகு, அந்தப் பெருமையை தனதாக்கியவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்.
கறம்பக்குடி அருகே பிலாவிடுதி என்ற கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், மும்பைக்கு வந்ததும் அங்கேயே தங்கியதும், பார்த்திபன், முரளி நடித்த வெற்றிக்கொடி கட்டு படத்தின் கதை போன்றது. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு, துபாயில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி தமிழ்ச்செல்வனை மும்பை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த முகவர் ஒருவர் பணத்தை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டார் என்று கூறப்படுகிறது.
துபாய்க்குச் செல்வதாக ஊரில் கூறிவிட்டு வந்த நிலையில், மீண்டும் வெறுங்கையுடன் திரும்புவதை விரும்பாத தமிழ்ச்செல்வன், மும்பையிலேயே தங்கிவிட்டார். 11-ம் வகுப்பு வரை படித்துள்ள தமிழ்ச்செல்வன், மும்பை ரயில் நிலையங்களில் கூலித் தொழிலாளியாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். கடின உழைப்பால் பார்சல் காண்ட்ராக்டராக தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது மட்டுமின்றி, அங்கு கஷ்டப்படும் தமிழர்களுக்கும் உதவி செய்யத் தொடங்கினார்.
இதனால், அப்பகுதி மக்களுக்கு தமிழ்ச்செல்வன் என்ற பெயர் மிகப் பரிச்சயம் ஆனது. அதன் பலனாக, அவர் அந்தப் பகுதியின் நகர சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த காலக்கட்டத்தில் தான், 2008-இல் தாஜ் ஹோட்டலில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அதில் படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோரை தள்ளுவண்டியில் படுக்க வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றினார்.
இவரது சேவையைப் பாராட்டி, மகாராஷ்டிர மாநில ஆளுநர் விருது வழங்கி கவுரவித்தார். அதுவரை சாதாரண தமிழ்ச்செல்வனாக அழைக்கப்பட்டு வந்தவர் அதன் பின் கேப்டன் தமிழ்ச்செல்வனாக உருவெடுத்தார். பின்னர் பாஜகவில் இணைந்தார். 2014-ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் சயான் – கோலிவாடா தொகுதியில் போட்டியிட தமிழ்ச்செல்வனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தமிழர்கள் ஓட்டு அப்படியே கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு விழ வெற்றி வாகை சூடினார்.
2019-ல் நடைபெற்ற தேர்தலில் தமிழ்ச்செல்வனுக்கு எதிராக கணேஷ் என்ற தமிழரை நிறுத்தியது காங்கிரஸ். ஆனால் அந்த முறையும் வாக்களார்கள் தமிழ்செல்வன் பக்கமே இருந்தனர். மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இம்முறை தமிழ்ச்செல்வனை வீழ்த்தி விடலாம் என எண்ணி மீண்டும் கணேஷையே காங்கிரஸ் நிறுத்தியது.
ஆனால், தமிழ்ச்செல்வனுக்கு சரத்குமார் உள்ளிட்டோர் வாக்கு சேகரிக்க, சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார் தமிழ்ச்செல்வன். இவரின் மகள் திருமணத்துக்காக 2019-ஆம் ஆண்டில் மகாராஷ்டிர முதலமைச்சராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் புதுக்கோட்டை வந்து மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்ற தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில், மகாராஷ்டிராவில் அமைச்சராகும் முதல் தமிழர் என்ற சாதனையை படைப்பார் தமிழ்ச்செல்வன்.