இந்தியா
Sambhal Violence | உ.பி. மசூதியில் ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் மீது கற்கள் வீச்சு… 3 பேரை சுட்டுக்கொன்றது போலீஸ்!
Sambhal Violence | உ.பி. மசூதியில் ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் மீது கற்கள் வீச்சு… 3 பேரை சுட்டுக்கொன்றது போலீஸ்!
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், மசூதியில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் குழுவினர் மீது கும்பல் கற்களை வீசி தாக்கிய நிலையில் பெரும் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். மசூதி அருகே கலவரக்காடாக மாறிய நிலையில் நடந்தது என்ன?
உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பல் பகுதியில் ஷாஹி ஜமா பள்ளிவாசல் அமைந்துள்ளது. மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்து கோவிலை இடித்து இந்த மசூதியை கட்டியிருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பள்ளிவாசலை ஆய்வு செய்யக் குழு அமைத்து உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், ஆய்வுகுழுவினர், போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளிவாசலில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றிருந்தனர். அப்போது ஏராளமானோர் அங்கு கூடி அந்த ஆய்வுக்குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்தவாறு முழக்கமிட்டனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்ட போதும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து முழக்கமிட்டவாறு முன்னேறி வந்த போராட்டக்காரர்கள், ஒரு கட்டத்தில் 3 பக்கமும் சுற்றி வளைத்து கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்தனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீவைத்து கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவலர்கள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும். துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர்.
இந்த வன்முறை சம்பவத்தில் நயீம், பிலால், நௌமன் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போலீஸ் பிஆர்ஓ ஒருவர் காலில் படுகாயமடைந்தார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்த நிலையில், அதிகாரிகள் மசூதிக்குள் சென்று ஆய்வு செய்தனர். முழு ஆய்வு நடவடிக்கைகளும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளன., இந்த குழு தனது அறிக்கையை வரும் 29ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
பள்ளிவாசலை ஆய்வுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பின்னர், கடந்த சில நாட்களாகவே அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஐந்து பேருக்கு மேல் ஒன்றுகூட தடைவிதிக்கப்பட்டிருந்தது. துப்பாக்கி ஏந்திய காவலர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. கடந்த 19 ஆம் தேதியும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பள்ளிவாசலில் முதல்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பள்ளிவாசல் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர். அப்பகுதியில் உள்ள கேலா தேவி கோயில் நிர்வாகத்தினர், ஷாஹி ஜமா பள்ளிவாசல், முன்னர் ஸ்ரீ ஹரிகர் கோயிலாக இருந்தது என்றும்,பின்னர் அது 1529ஆம் ஆண்டு பள்ளிவாசலாக மாற்றப்பட்டது என்றும் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.
அதன் பேரில் தான் அந்தப் பள்ளி வாசலில் ஆய்வுமேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தில் இந்த அதிரடி உத்தரவால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.