இந்தியா
Parliament Winter Session: நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.. அதானி, மணிப்பூர் விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!
Parliament Winter Session: நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.. அதானி, மணிப்பூர் விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இன்று முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. இதில் முக்கியமாக, கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் வக்பு வாரிய திருத்த மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவிய நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வக்பு வாரிய திருத்த மசோதா தவிர, ஐந்து மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிமுகம் செய்து நிறைவேற்ற பட்டியலிடப்பட்டுள்ளன. ஐந்து புதிய மசோதாக்களில் வணிகக் கப்பல் மசோதா, கடலோரக் கப்பல் மசோதா, இந்திய துறைமுக மசோதா, பஞ்சாப் நீதிமன்றங்கள் (திருத்தம்) மசோதா உள்ளிட்டவை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக்கட்சிகளின் கூட்டம் ஒன்று மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
Also Read:
TRAI New Rule: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு..TRAI-ன் புது ரூல்ஸ் என்ன தெரியுமா?
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே சமயம் கூட்டத்தில் பேசிய, காங்கிரஸின் கௌரவ் கோகோய், அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதானி, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.