இந்தியா
பாம்பன் பாலத்தில் என்ன பிரச்சனை? முழு விளக்கம்!
பாம்பன் பாலத்தில் என்ன பிரச்சனை? முழு விளக்கம்!
ராமேஸ்வரத்தில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதாக தெற்கு ரயில்வேயின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி சவுத்ரி, இந்திய ரயில்வேக்கு அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். புதிய பாலத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்த உண்மைகள் என்ன? ரயில் பாலத்தில் இப்போதே கடல் அரிப்பு ஏற்பட்டு விட்டதாக கூறப்படுவது உண்மையா? கடலில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தில் இனிமேல் குறைபாடுகளை சரிசெய்ய முடியுமா?
ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற பாம்பன் ரயில்வே தூக்கு பாலம் பழுதடைந்ததால், அதற்கு பதிலாக புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில், 101 தூண்களைக் கொண்ட பாம்பன் ரயில்வே பாலத்தை கடந்த நவம்பர் 13 மற்றும் 14-ம் தேதிகளில் தெற்கு ரயிலேவே முதன்மை பாதுகாப்பு அதிகாரி சவுத்ரி ஆய்வு செய்தார். பாலத்தின் துணை கார்டர்கள், செங்குத்தாக உயரக்கூடிய லிஃப்ட் தண்டவாளம் மற்றும் அகலப்பாதை தண்டவாளம் ஆகியவற்றை 2 நாட்கள் ஆராய்ந்தார்.
அப்போது, புதிய பாலத்தின் மீது 90 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதை தெற்கு ரயிலேவே முதன்மை பாதுகாப்பு அதிகாரி சவுத்ரி கண்டுபிடித்து இருக்கிறார்.
ஆய்வு தொடர்பாக இந்திய ரயில்வே ஆணையத்திற்கு, ஏ.எம். சவுத்ரி சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பல்வேறு தகவல்கள் ஆதாரத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளன. ரயில்வே பாலம் தரக்குறைவாக கட்டுப்பட்டுள்ளதாகவும், பாலம் கட்டுவதற்கான பணியில் இருந்தே பெரும் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பாம்பன் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்தாக உயரும் தண்டவாளம், தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்த தரத்திற்கு அமைக்கப்படவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தின் கட்டுமானத்திற்கு முன்பு, தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அமைக்கும் நடைமுறைகளையும் பின்பற்றவில்லை.
தாங்கள் வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே வாரியமே மீறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும், பாலத்தின் பளுதூக்கும் திறன் 36 சதவிகிதம் வரை குறைந்துள்ளது என்றும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். கட்டுமானத்தில் செய்யப்பட்டுள்ள வெல்டிங் பற்றவைப்பும் உரிய தரத்தில் இல்லை. கடலில் பாலம் கட்டப்படுவதால் ஏற்படக்கூடிய அரிப்பு சேதம் குறித்தும் உரிய கவனம் செலுத்தப்படவில்லை.
உலகிலேயே அதிக அரிமானம் ஏற்படக் கூடிய 2-வது பகுதியாக கருதப்படும் கடல்பகுதியில், அதை கருத்தில் கொண்டு பாம்பன் பாலம் கட்டப்படவில்லை என்றும் முக்கியமான பாதுகாப்பு குறைபாடுகளை அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். புதியதாக கட்டப்பட்டுள்ள பாலம் இன்னும் பயன்பாட்டிற்கே வராத நிலையில், அதற்குள் பாலத்தில் அரிமானம் ஏற்பட தொடங்கிவிட்டது. அதனை சுட்டிக்காட்டிய பிறகும் கூட இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என தெற்கு ரயில்வேயின் முதன்மை பாதுகாப்பு ஆணையர் சவுத்ரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதால் ரயில் இயக்குவதை ஒத்திவைக்க கோரிக்கை எழுந்துள்ளது. பாலத்தின் தரத்தினை முழுமையாக ஆராய வேண்டும் எனவும் சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
புதிய ரயில் பாலத்தில் ஏராளமான பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தாலும் அதில் ரயிலை இயக்குவதற்கு பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி அனுமதி கொடுத்து இருக்கிறார். பாலத்தில் லிஃப்ட் பகுதி வரும்போது மட்டும் 50 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கலாம், மற்ற பகுதிகளில் 75 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கலாம் என்ற நிபந்தனைகளுடன் ரயில் சேவைக்கு அவர் அனுமதி அளித்து இருக்கிறார்.
தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத நிலையிலும், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய தூக்குப் பாலம் சிறந்ததாக இருந்ததாகவும் சவுத்ரி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கிடையே பாம்பன் சாலை மேம்பாலத்தின் தூண்களிலும் அரிப்பு ஏற்பட்டு இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாம்பன் சாலை பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களில் ஐந்தாவது தூணில் கீழ் புற பகுதியில் கான்கிரீட் சிமென்ட் உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்து வருகிறது. உடைந்த தூண் பகுதி கடலுக்குள் உள்ளதால் கடல் நீர் மற்றும் கடல் காற்று காரணமாக கான்கிரீட் கம்பிகள் விரைவாக துருப்பிடித்து தூண் வலிமை இழந்து முற்றிலும் சேதமடையும் அபாயம் உள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தூணில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய பாம்பன் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராமேஸ்வரம் தீவு பகுதியை இந்திய நாட்டின் நிலப்பரப்புடன் இணைக்கும் ரயில் மற்றும் சாலை என இரு பாலங்களிலும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகள் மற்றும் ராமேஸ்வரம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் இரு பாலங்களையும் உடனே சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.