உலகம்
இம்ரான் கான் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர்!
இம்ரான் கான் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர்!
பாகிஸ்தானில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக் கோரி அவரது கட்சியினர் முன்னெடுத்த போராட்டம் நான்கு நாட்களின் பின்னர் கைவிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நிலவிய பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தானின் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மீது, 200க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
அதனடிப்படையில் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அவர் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
அரசுக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளை வெளியிட்டு வந்த இம்ரான், கடந்த 24ஆம் திகதி நாடு தழுவிய போராட்டம் நடத்த தன் கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.
இதன்படி, தலைநகர் இஸ்லாமாபாதை நோக்கி அவரின் மனைவி புஷ்ரா பீபி தலைமையில் இம்ரான் கட்சி தொண்டர்கள் பேரணியை ஆரம்பித்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இருந்து மேலும் பல தொண்டர்கள் இஸ்லாமாபாத் விரைந்தனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறியதில் இரு பொலிஸாரும் நான்கு துணை இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள் உள்ள இஸ்லாமாபாதின் மைய பகுதியான டி – சவுக்கை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், இம்ரான் கானை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இப்போராட்டத்துக்கு இம்ரான் மனைவி புஷ்ரா பீவி மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் முதல்வர் அலி அமீன் காந்தாபூர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்நிலையில் மக்கள் கொல்லப்படுவதை கருத்தில் வைத்து எங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுகிறோம்’ என்று இன்சாப் கட்சியினர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.