இந்தியா

சாதித்தும் பயனில்லை… மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவிக்கு இழுபறி.. அடுத்து வரப்போவது யார்?

Published

on

சாதித்தும் பயனில்லை… மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவிக்கு இழுபறி.. அடுத்து வரப்போவது யார்?

Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் ஸ்டிரைக் ரேட் 85 சதவிகிதம் ஆகும். பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி மொத்தமுள்ள 288 இடங்களில் 230 தொகுதிகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. மேலும் இது அம்மாநில அரசியல் வரலாற்றில் முதல்முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்து என்ற பதவி எந்த கட்சிக்கும் இல்லாமல் போனது. இந்த சாதனையை சத்தமில்லாமல் படைத்த மகாராஷ்டிரா தேர்தலில்தான் தற்போது யார் முதலமைச்சர் என முடிவெடுக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றது. அதிக இடங்களை பிடித்தது தாங்கள்தான் என பாஜகவும், ஷிண்டேவின் நலத்திட்டங்களுக்கு கிடைத்த வெற்றியே என சிவசேனாவும் முதலமைச்சர் பதவிக்கு மோதிக்கொள்கின்றன.

மகாராஷ்டிரா அரசியலில் மிகவும் வலிமையாக இருந்த சிவசேனாவை உடைத்து, கடந்த முறை பாஜக கூட்டணி அரசு அமைய காரணமாக இருந்ததால் தங்களுக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என கேட்கிறார் ஷிண்டே. இதனால் பிகார் மாநிலத்தில் உள்ள பார்முலாவை பின்பற்ற வேண்டும் என ஷிண்டேவின் ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். அதாவது பிகாரில் 47 இடங்களை மட்டுமே பிடித்த நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தது பாஜக. ஆனால், பாஜகவிற்கு பிகாரில் 84 எம்எல்ஏக்கள் உள்ளனர் .
எனவே பிகார் மாநிலத்தில் உள்ள அரசியல் பார்முலாவை மகாராஷ்டிராவிலும் அமல்படுத்துவதுதான் பாஜகவுக்கு சிறந்த உத்தியாக அமையும் என மூத்த பத்திரிகையாளர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க மஹாயுதி கூட்டணியின் மற்றொரு பங்களியான அஜித் பவார் தேவேந்திர பட்னாவிஸ் பக்கம் நிற்கிறார். அஜித் பவாரும் ஏக்நாத் ஷிண்டேவும் மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், ஷிண்டேவை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள அஜித் பவார் தயாராக இல்லை. இதனால் முதலமைச்சர் பதவி யாருக்கு வழங்கலாம் என்பதில் இழுபறி நீடிப்பதால் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு 13 இடங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், சுயேச்சை மற்றும் உதிரிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவும் அக்கட்சி முயன்று வருவதாக மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version