இந்தியா
முதல்வர் யார்? “நேரடியாக மோடியிடம் பேசிவிட்டேன்” – ஓப்பனாக சொன்ன ஏக்நாத் ஷிண்டே!
முதல்வர் யார்? “நேரடியாக மோடியிடம் பேசிவிட்டேன்” – ஓப்பனாக சொன்ன ஏக்நாத் ஷிண்டே!
மகாராஷ்டிராவில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இணைந்த மகாயுதி கூட்டணி, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதில், தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேதான் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று 31 சதவீதம் வாக்காளர்கள் விரும்புவதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறின.
ஆனால், கூட்டணியில் பெரிய கட்சி என்ற அடிப்படையிலும் அதிக இடங்களில் போட்டியிட்ட கட்சி என்ற அடிப்படையிலும் துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் தான் முதலமைச்சர் பதவிக்கு சரியான நபர் என்று பாஜக தலைவர் பிரவின் தரேகர் தெரிவித்திருந்தார். அவர்தான் அடுத்த முதலமைச்சர் என வசீம் நகரம் உள்ளிட்ட இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
முதலமைச்சர் பதவிக்கு அஜித் பவார் தரப்பில் வெளிப்படையாக விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற போதிலும் அவரது முயற்சியில் தான் பாஜக மற்றும் ஷிண்டே சிவசேனா கூட்டணி அமைந்ததாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அமோல் மிட்காரி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் :
விஜய் சொன்ன இரு சொற்கள்! பரபரப்பாகும் அரசியல் களம்!
தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் அங்கே தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் “கிங் மேக்கர்” என்றும் கூறியிருந்தார். அடுத்த முதலமைச்சர் அஜித் பவார் தான் என போஸ்டர்களும் ஒட்டப்படுகின்றன. இதனால் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் அஜித்பவாரும் குதித்தார்.
இந்த நிலையில், 3 கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம் என்று சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
அதேசமயம், தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்றோடு, நான்கு நாள்களான நிலையில், இன்னமும் மகாராஷ்டிராவில் யார் முதல்வர் என்பதில் முடிவு எட்டப்படாமலே இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஷிண்டே சிவசேனாவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முக்கியமான விஷயத்தை அறிவித்திருக்கிறார்.
செய்தியாளர்களைச் சந்தித்த ஏக்நாத் ஷிண்டே, “மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து உள்ளனர். நான் மக்களின் முதல்வர். புகழுக்காக முதல்வராகவில்லை. நான் ஒரு தொண்டனாகவே பணியாற்றினேன்.
பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷாவும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தனர். இருவருடனும் தொலைபேசியில் பேசினேன். அப்போது மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் எப்போதும் நான் தடையாக இருக்க மாட்டேன் என உறுதி அளித்தேன்.
இதையும் படியுங்கள் :
ஓ.எம்.ஆர். சாலையில் பயங்கர விபத்து.. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்த ஐந்து பெண்கள்!
ஆட்சி அமைப்பதில் பிரதமர் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வோம். என்.டி.ஏ. கூட்டணி தலைவர் என்ற முறையில் பிரதமர் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். அவரின் முடிவை பாஜகவினர் எப்படி ஏற்றுக்கொள்கிறார்களோ அப்படியே நாங்களும் ஏற்றுக்கொள்வோம். யாரை முதல்வராக கூட்டணி முடிவு செய்கிறதோ அவர்களுக்கு ஆதரவளிப்போம்” என்று தெரிவித்தார்.