திரை விமர்சனம்
ரெய்டு திரைப்பட விமர்சனம்.
ரெய்டு திரைப்பட விமர்சனம்.
2018ம் ஆண்டு சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த ‘தகரு’ என்ற கன்னட படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் இந்த படம். டெரர் போலீஸ் அதிகாரியான பிரபாகரன் (விக்ரம் பிரபு) தனது எல்லைக்குள் ரவுடிகளே இருக்க கூடாது என்று அவர்களை தீவிரமாக வேட்டையாடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடிகள் இணைந்து அவரது காதலியை (ஸ்ரீதிவ்யா) கொன்று விடுகிறார்கள். அதற்கு நாயகன் எப்படிப் பழிவாங்குகிறார் என்பதே படத்தின் கதை.
டெரர் போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு தன் பங்கை சிறப்பாக செய்கிறார். அவரது உயரமும், தோற்றமும் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. ஆனால் வலுவில்லாமல் இஷ்டத்துக்கு சுற்றும் திரைக்கதையால் அவரது நடிப்பும் கவனிக்கப்படாமல் போகிறது. போதைக்கு அடிமையான இளம் பெண்ணாக நடித்திருக்கும் அனந்திகா, வில்லன்களாக வரும் ரிஷி ரித்விக், சௌந்தர்ராஜா, டானி, வேலு பிரபாகரன் ஆகியோர் இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார்கள். பல வருட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீதிவ்யா மீண்டும் வந்திருக்கிறார். கடைசி 30 நிமிடங்கள் விக்ரம் பிரபு காதலியாக வந்து வில்லன்களால் கொல்லப்பட்டு விடுகிறார்.
என்றாலும் அதே ஊதா கலரு ரிப்பன் அழகை அப்படியே வைத்திருக்கிறார்.‘நான் சும்மா வந்தா விருந்தாளி, உன்னைப் பார்க்க வந்தால் நீ காலி’, ‘எல்லாரும் சொந்தக் காலில் நிக்கிறாங்க. நீ போன் கால்ல நிக்கிற’, ‘ஆண்டவன் உன் தலையெழுத்தை பென்ல எழுதி இருக்கலாம். ஆனா நான் கன்ல(துப்பாக்கி) எழுதுவேன்’, ‘ஆம்பளன்னா ரத்தம் இருக்கணும், அது சுத்தமா இருக்கணும்’ இப்படி ஏகப்பட்ட மொக்கையான பன்ஞ் டயலாக்கை எழுதியிருக்கிறார் முத்தையா. கதிரவனின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். சாம் சி.எஸ் சத்தமாக பின்னணி இசைத்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார். வெற்றி பெற்ற ஒரு படத்தின் ரீமேக்கையும் வெற்றிப் படமாக தர இயக்குனர் கார்த்திக் இன்னும் கூடுதலாக மெனக்கெட்டிருக்கலாம்.