உலகம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் 57 வங்கதேச குடிமக்களுக்கு சிறைத் தண்டனை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் 57 வங்கதேச குடிமக்களுக்கு சிறைத் தண்டனை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வங்கதேச அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய வங்கதேச குடிமக்கள் 57 பேருக்கு அமீரக நீதிமன்றம் நீண்டகால சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி ஆளும் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்க்கும் வங்கதேசத்தைச் சேர்ந்த நபர்கள் வங்கதேச அரசுக்கு எதிராக அங்கு கடந்த ஜூலை 19 அன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஒன்றுகூடி கலவரத்தைத் தூண்டும் விதமாக நடந்துகொண்டதாகக் கூறி போராட்டம் நடத்திய வங்கதேசத்தைச் சேர்ந்த 57 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீண்டகாலம் சிறையில் அடைக்க அபுதாபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், 53 நபர்களுக்கு 10 ஆண்டுகளும், ஒருவருக்கு 11 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனைக் காலம் முடிந்த பிறகு அவர்களது நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அமீரக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த போராட்டம் பொதுமக்கள் பாதுகாப்பை சீர்குலைத்ததாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும்படி நடத்தப்பட்டதாகவும், காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு கூறிய போதும் அவர்கள் கலையாததால் கைது செய்யப்பட்டதாக அங்குள்ள அரசு அதிகாரி தெரிவித்தார்.
அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் ஐக்கிய அரபு அமீரக ஆய்வாளர் டெவின் கென்னி கூறுகையில், “வன்முறைகள் ஏதும் இல்லாத குற்றச்சாட்டின் பேரில், ஒரே இரவில் இப்படியான சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரக மண்ணில் பொது மக்களின் போராட்டத்திற்காக இப்படியான தண்டனைகள் வழங்கப்படுவது நாட்டில் கருத்து வேறுபாடுகள் வெளிப்படுவதை அடக்க அரசு அதிக முன்னுரிமை அளிப்பதைக் காட்டுகிறது” என்றார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த நபர்கள் குற்றவியல் நோக்கத்துடன் போராடியதாக அவர்கள் மீது எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் நியமித்த பாதுகாப்பு வழக்கறிஞர் வாதாடிய போதிலும், அவரின் வாதம் மறுக்கப்பட்டு அவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தண்டைனை குறித்து வங்கதேச அரசு தற்போது வரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. துபாயில் உள்ள வங்கதேசத்தின் தூதரகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குடிமக்கள் உள்நாட்டு சட்டங்களை மதித்து நடக்குமாறு பதிவிட்டுள்ளது. [எ]