இந்தியா
கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் : மக்களுக்கு ஆளுநர் அறிவுரை!
கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் : மக்களுக்கு ஆளுநர் அறிவுரை!
புயலுடன் கனமழை பெய்து வரும் நிலையில் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், முற்றிலும் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடந்து வருகிறது. இதனால் மரக்காணம், கல்பாக்கம், மாமல்லபுரத்தில் 90 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே சென்னைக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகனமழை எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது. எனினும் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சில இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதற்கிடையே கரையை கடக்கும் பகுதியாக புதுச்சேரியை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், பொதுமக்கள் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை வெளியே வர வேண்டாம் என அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் முதலிய மாவட்டங்களுக்கு 10 மணிவரை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் மற்றும் கொந்தளிப்பு நாளை மாலை வரை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவி மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஃபெஞ்சல் புயலுடன் பெய்து வரும் கன மழையால் தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நமது மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த இக்கட்டான நேரத்தில், நமது மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், முற்றிலும் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
அதிகாரிகள் வழங்கும் அறிவுரைகளை தயவு செய்து பின்பற்றவும். இந்த அவசரநிலையைச் சமாளிக்க மத்திய, மாநில அமைப்புகள் அயராது உழைத்து வருகின்றன.
சில தன்னார்வ தொண்டு அமைப்புகளும் மக்களின் துயரங்களைக் குறைக்க தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றன. இந்த இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருப்போம்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.