உலகம்
பரபரப்பை ஏற்படுத்தும் டிரம்ப்!
பரபரப்பை ஏற்படுத்தும் டிரம்ப்!
அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்த ஸெலென்ஸ்கியுடன் எலானும் உரையாடியது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றிக்கு எலான் மஸ்க் முக்கியமான காரணமானவர் என்று கூறப்படுகிறது. ஏனெனில், டிரம்ப்பின் தேர்தல் பிரசாரத்தின்போது, அவருக்காக 110 மில்லியன் டாலருக்கும் அதிகமான நன்கொடையை அளித்துள்ளார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி, “தேர்தலில் வெற்றி பெற்றால், எலானுக்கு அமைச்சர் பதவியோ வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ அளிக்கப்படும்’’ என்று தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, புதன்கிழமையில் டிரம்ப்புக்கு உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த சமயத்தில் டிரம்ப்புடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் எலானும் உடனிருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஸெலென்ஸ்கியுடன் எலானையும் பேச வைத்துள்ளார், டிரம்ப். உரையாடலில், உக்ரைனுக்கு உதவுவதற்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும், தொடர் ஆதரவு அளிக்கப்படும் என்றும் எலான் உறுதியளித்துள்ளதாக ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். இதுதவிர, எலானுக்கு பதவி அளிப்பது குறிப்பது ஸெலென்ஸ்கியுடன் டிரம்ப் ஆலோசித்திருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
2022 ஆம் ஆண்டில் ரஷியாவுடனான போரிலிருந்து உக்ரைனுக்கு பல்வேறு விதங்களில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் நிறுவனம் உதவியளித்து வருகிறது. மொபைல் போன் நெட்வொர்க்குகள் அழிக்கப்பட்ட பகுதிகளில் உக்ரைனின் ராணுவ தகவல்தொடர்பு ஆதரவையும் ஸ்டார்லிங்க் வழங்கியது.
இருப்பினும், ரஷியாவுக்கு எதிரான போரில் அமெரிக்க உதவிக்கான ஸெலென்ஸ்கியின் கோரிக்கைகளையும் எலான் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், `தான் வெற்றி பெற்றால், உக்ரைனில் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவர முடியும்’ என்று தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஜூலை மாதத்தில் நிகழ்ந்த டிரம்ப் மீதான கொலை முயற்சியில் இருந்து டிரம்ப் தப்பித்ததையடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின், டிரம்ப்புடன் கலந்துரையாடல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் தெரிந்து விடும், எலான் மஸ்குக்கும் ஸெலென்ஸ்கிக்கும் அளிக்கப்பட்டவை வாக்குறுதிகளா அல்லது பிரசாரத்தின் ஒரு பகுதியா என்று..