உலகம்

ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது தெய்ஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

Published

on

ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது தெய்ஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

 

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஒக்டோபர் 7-ம் திகதி நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது தெய்ஃப் கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

Advertisement

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7-ம் திகதி நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் பிணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காரணமான ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா உள்ளிட்ட தலைவர்களை கொல்வோம் என இஸ்ரேல் ஏற்கெனவே கூறியது.

இந்நிலையில், ஈரான் புதிய அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்றிருந்தார். பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பிறகு, விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை அவர் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இஸ்மாயில் ஹனியா மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு அடுத்தபடியாக தற்போது ஹமாஸ் ராணுவ தலைவர் முகமது தெய்ஃப் கொல்லப்பட்டார் என்ற தகவலை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இஸ்மாயில் ஹனியா இறுதி ஊர்வலத்துக்காக டெஹ்ரானில் மக்கள் திரண்டிருக்கும் இந்த நேரத்தில் தெய்ஃப்பும் இறந்துவிட்டார் என்ற செய்தியை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. தெய்ஃப், ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என நம்பப்படுபவர்.

Advertisement

ஜூலை 13 அன்று இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள முகமது தெய்ஃப் மற்றும் ஹமாஸின் கான் யூனிஸ் பகுதி படைப்பிரிவின் தளபதி சலாமே ஆகியோரின் இடங்களை தாக்கின. இதில் தெய்ஃப் உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

யார் இந்த முகமது தெய்ஃப்? – ஹமாஸ் அமைப்பில் மிகவும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நபர்களில் ஒருவரான தெய்ஃப், பல ஆண்டுகளாக இஸ்ரேலின் மோஸ்ட் வான்டட் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கடந்த காலங்களில் தற்கொலை படை தாக்குதல், குண்டுவெடிப்பு போன்ற பல தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தி அந்நாட்டு மக்களின் மரணத்துக்கு வழிவகுத்தார் இந்த தெய்ஃப்.

பொது வெளியில் இதுவரை அரிதாகவே தோன்றியுள்ள தெய்ஃப், ஹமாஸ் அமைப்பில் 1987-ல் சேர்ந்தார். காசாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்ற இவர், 1989-ல் இஸ்ரேல் அரசால் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் இருந்தார். சுரங்கப்பாதை அமைப்பது, வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற தெய்ஃப் அதனை ஹமாஸ் அமைப்புக்கும் பயிற்றுவித்து பல தாக்குதல்களை இஸ்ரேல் மீது ஏவக் காரணமாக இருந்தார் என்று சொல்லப்படுவதுண்டு.

Advertisement

இந்த நிலையில்தான் இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி  நடத்திய தாக்குதலுக்கு மூளையாக இருந்த இவரை, தாக்குதல் நடந்த 10-வது மாதத்தில் இஸ்ரேல் கொலை செய்துள்ளது. [எ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version