இந்தியா
ஹெல்மெட்டை மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஜோடி… இணையத்தில் குவியும் வாழ்த்து…
ஹெல்மெட்டை மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஜோடி… இணையத்தில் குவியும் வாழ்த்து…
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் ஜோடி ஹெல்மெட்டை பரஸ்பரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளது. சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இளம் ஜோடி செய்த இந்த செயல் இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. அவர்களது மணவாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் டோன்கர்கர் பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு உட்பட்ட கரியா தோலா என்ற கிராமத்தில் திரேந்திர சாகு என்பவர் ஜோதி சாகுவை கடந்த ஞாயிறு அன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அப்போது இருவரும் பரஸ்பரம் மோதிரம் மாற்றிக் கொண்ட பின்னர் ஹெல்மெட்டையும் மாற்றினார்கள்.
இதைப் பார்த்து அங்கிருந்த உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதன் பின்னர் அவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொள்வதற்காக இந்த செயலில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தனர். பிரேந்திர சாகுவின் தந்தை பஞ்சுராம் சாகு என்பவர் பஞ்சாயத்து செயலாளராக இருந்து வந்துள்ளார்.
ஒருமுறை வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு அவர் திரும்பி வந்த போது பைக்கில் அவர் திரும்பி வந்தபோது ஹெல்மெட் அணியவில்லை. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பஞ்ச்ராம்சாகு படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து பஞ்ச்ராமின் குடும்பத்தினர் தொடர்ந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக பஞ்சுராமின் மகன் பிரேந்திரசாகு தனது நிச்சயதார்த்தத்தின் போது ஹெல்மெட் அணிந்துள்ளார்.
மேலும் இவரது குடும்பத்தினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஹெல்மெட் வழங்கியுள்ளனர். தற்போது இந்த ஹெல்மெட் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி உள்ளது. சமூக அக்கறையுடன் செயல்பட்ட இந்த ஜோடிக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.