இலங்கை
அயலாரின் பசுவை இறைச்சியாக்கிய நுணாவில் நூலக ஊழியர் கைது
அயலாரின் பசுவை இறைச்சியாக்கிய நுணாவில் நூலக ஊழியர் கைது
சாவகச்சேரி நகரசபையின் நுணாவில் பொது நூலகத்தில் வைத்து அயலவரின் மேச்சலுக்காக கட்டப்பட்ட பசு மாட்டைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்த பொது நூலக ஊழியர் உட்பட்ட இருவர் அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
கடந்த புதன்கிழமை நுணாவில் பொதுநூலகத்திற்கு அருகில் உள்ள காணியில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்ட பசுமாடு காணமல் போயுள்ளது.
இந்நிலையில் பசுவின் உரிமையாளரும் அப்பகுதி இளைஞர்களும் இன்று பகல் தேடுதல் நடத்திய போது நூலக மதிலுக்கு அருகில் பசுமாட்டின் தலை உட்பட்ட பாகங்களைக் கண்டுள்ளனர்.
இதையடுத்து நூலகத்துக்குள் நுழைந்து பார்த்த பொழுது நூலக குளியலறைக்குள் வைத்து பசுவினை இறைச்சியாக்கிய இரத்தக்கறைகளைக் கண்டுள்ளனர்.
இதனால் நூலக ஊழியர் மீது சந்தேகமடைந்த இளைஞர்கள் ஊழியரை விசாரித்த பொழுது இன்னொருவருடன் இணைந்து புதன்கிழமை கடமை நேரத்தில் பசுவினை இறைச்சியாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து மற்றையவரையும் பிடித்த இளைஞர்கள் நூலகத்தை உடனடியாகவே மூடி சாவகச்சேரி பொலிஸாரிம் முறைப்பாடு செய்து இருவரையும் ஒப்படைத்துள்ளனர்.
இருவரையும் கைது செய்த பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்து நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.