இலங்கை
தமிழர்களின் தவறான முடிவே பேரழிவுக்கு வழிவகுத்ததாம்;
தமிழர்களின் தவறான முடிவே பேரழிவுக்கு வழிவகுத்ததாம்;
ரிஷாத் பதியுதீன் கண்டுபிடிப்பு
உணர்ச்சிகளும், எழுச்சிகளும் ஏற்பட்டதால், தமிழ் இளைஞர்கள் தவறான வழி சென்றார்கள். இதனால், ஏற்பட்ட யுத்தம் சகல சமூகங்களையும் பாதித்தது என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாநாடு ஒன்று மன்னாரில் நேற்று இடம்பெற்றுள்ளது. அங்கு உரையாற்றும்போதே, ‘தேசிய மாற்றம் என்ற போர்வைக்குள் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அழிப்தற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரிஷாத் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தேசிய மக்கள் சக்தி வென்றுவிட்டது என்பதற்காக, முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாதொழிக்க விரும்புகின்றீர்களா? நாடாளுமன்ற அரசியலில், இனக் குழுக்களுக்களுக்கு என்று தனித்தனி பிரதிநிதித்துவங்கள் அவசியம். தேசிய அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளமைக்காக, சமூகங்களின் பிரதிநிதித்துவங்களை இல்லாமற் செய்ய இயலாது.
எங்கள் மத்தியில் உள்ள சிலர் இவ்வாறான வேலைகளைச் செய்வதற்குத் துணிந்துள்ளனர். இந்த சதிகளுக்குத் துணைபோயுள்ள எமது சகோதரர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.
பிரதிநிதித்துவங்கள் இல்லாத சமூகங்கள், திசை தவறும் ஆபத்துக்களை எதிர்கொள்ளலாம். முறையான தலைமைத்துவங்கள் இருந்தபோதும், உணர்ச்சி, எழுச்சிகள் ஏற்பட்டதால், தமிழ் இளைஞர்கள் தவறான வழி சென்ற வரலாறு நமது நாட்டில் உள்ளது. இதனால், ஏற்பட்ட யுத்தம் சகல சமூகங்களையுமே பாதித்திருந்தன. இதுபோன்ற எழுச்சியை, இப்போது ஏற்பட்டுள்ள மாற்றமும் ஏற்படுத்துமோ என நாங்கள் அஞ்சுகின்றோம்- என்றார். (ச)