இந்தியா
‘‘புயல் காலத்தில் தலைநகர் சென்னை நிம்மதியாக இருக்கிறது’’ – முதல்வர் ஸ்டாலின்!
‘‘புயல் காலத்தில் தலைநகர் சென்னை நிம்மதியாக இருக்கிறது’’ – முதல்வர் ஸ்டாலின்!
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களுடன், காணொலி காட்சி வழியாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மழை விவரம், முகாம்கள் விவரம், தண்ணீர் வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கவும் அவர் உத்தரவிட்டார். மேலும், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் முத்தமிழ் மன்ற நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் காணொலி வாயிலாக பேசிய முதலமைச்சர், அங்கு செய்து தரப்பட்டுள்ள உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் பேசும்போது, அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தலைநகர் சென்னை நிம்மதியாக இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரை பொறுத்தவரை குற்றச்சாட்டு கூறுவதையே வேலையாக வைத்துள்ளார். அவரின் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதும் இல்லை, கவலைப்படுவதும் இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
மேலும், சென்னையில் வழக்கமாக மழைநீர் தேங்கும் இடங்களில் இம்முறை தேங்கவில்லை. மழை பெய்யும் போது சில இடங்களில் தேங்கினாலும், மழை நின்றதும் தண்ணீர் வடிந்து விட்டது. சென்னையில் இன்னும் முழுமையாக மழை நிற்கவில்லை. முழுமையாக மழை நின்றதும் அனைத்து இடங்களிலும் தேங்கியிருந்த மழைநீர் வடிந்துவிடும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, புயல் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தனது தொகுதியான கொளத்தூர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். முதலில் கொளத்தூர் தொகுதியில் உள்ள செல்விநகர் நீர் உந்து நிலையத்தில் பணிகளை ஆய்வு நடத்தினார். பின்னர் செல்வி நகர், ஜி.கே.எம். காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், மக்களிடம் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அரசின் நடவடிக்கையால் மழை நீர் தேங்கவில்லை என மக்கள் நன்றி தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஜி.கே.எம் காலனியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் உள்ள வசதிகள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் வானிலை ஆய்வு மைய அறிவுறுத்தலின்பேரில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அரசின் நடவடிக்கையால் சென்னையில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று கூறினார்.
இதேபோல், சென்னையில் வால்டாக்ஸ் சாலை, கல்யாணபுரம் பக்கிங்ஹாம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளால் தண்ணீர் வெளியேறுவதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக, பேசின் பாலம் அருகே ஓட்டேரி நல்லா கால்வாய்- காந்தி கால்வாய்- ரயில்வே கிராஸ் ஓவர் கால்வாய் ஆகியவற்றின் வழியாக மழைநீர் வெளியேறும் இடத்தை பார்வையிட்டார்.
மேலும், சென்னை டெமல்லோஸ் சாலை பம்பிங் ஸ்டேஷன் தெரு பகுதியில் மழை நீர் வடிவதற்காக எடுக்கப்பட்டுள்ள பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி, கள நிலவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாழ்வான பகுதிகளில் வசித்த 193 பேர் அழைத்து வரப்பட்டு 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னையில் பாதிப்பு இல்லை என்று கூறினார். சென்னையில் மழை காரணமாக மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்ததாக கூறிய அமைச்சர், அதிகபட்சமாக மரக்காணத்தில் 22 சென்டி மீட்டர் மழை பதிவானதாக தெரிவித்தார்.