இந்தியா

மகாராஷ்டிரா முதல்வர் யார்? அமித்ஷா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வெளியான முக்கிய தகவல்!

Published

on

மகாராஷ்டிரா முதல்வர் யார்? அமித்ஷா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வெளியான முக்கிய தகவல்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 தொகுதிகளில் 230 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தக் கூட்டணியில், பாஜக மட்டும் 132 தொகுதிகளை வென்றது. இது மகாராஷ்டிராவில் பாஜக கைப்பற்றிய அதிகபட்ச தொகுதிகள். அதேபோல், இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டே சிவசேனா 57 தொகுதிகளையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

Advertisement

இவ்வளவு பெரிய வெற்றி பெற்று, தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையிலும், அந்த மாநிலத்தில் இன்னும் புதிய அமைச்சரவையும் முதல்வரும் யார் என்பது முடிவு எடுக்கப்படாமல், பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கடந்த ஆட்சியில் மகாயுதி கூட்டணியில் ஷிண்டே சிவசேனாவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், அஜித் பவார், தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகிய இருவரும் துணை முதல்வராக இருந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் வெற்றி பெற்ற பிறகு யார் முதல்வர் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்தக் கூட்டணியில் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ள பாஜக கட்சியைச் சேர்ந்தவர் தான் முதல்வராக நியமிக்கப்படுவார் என பேச்சு இருந்தது. அதிலும், தேவேந்திர ஃபட்னாவிஸ் தான் அடுத்த முதல்வர் என்றே பேச்சுகள் இருந்தன. ஆனால், இதற்கு ஷிண்டே சிவசேனாவும் ஏக்நாத் ஷிண்டேவும் தடையாக இருப்பார்கள் என்றும் பேச்சுகள் இருந்தன.

Advertisement

ஏக்நாத் ஷிண்டே, ஆளுநரை சந்தித்து தனது முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நான் மோடியிடம் பேசிவிட்டேன். முதல்வர் நியமனத்தில் இடையூறாக இருக்க மாட்டேன். அவர் என்ன முடிவுகள் செய்கிறாரோ அதற்கு கட்டுப்படுவேன் என்று தெரிவித்துவிட்டேன்” எனத் தெரிவித்தார். இது பாஜக முதல்வர் நியமிப்பதில் இனி சிக்கல் இல்லை என்பதற்கான அறிகுறியாக தெரிந்தது.

ஏக்நாத் ஷிண்டேவின் இந்த அறிவிப்பிற்குப் பிறகும் அங்கு தொடர்ந்து முதல்வர் தேர்வில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இப்படியான சூழலில் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகிய மூவருடனும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் மகாராஷ்டிரா முதல்வர் யார் என்பது குறித்து முடிவு எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து சி.என்.என். நியூஸ்18-க்கு கிடைத்த தகவலின்படி, ஏக்நாத் ஷிண்டே, அமைச்சரவையில் தனது சிவசேனாவிற்கு 12 அமைச்சர் பதவிகளை கேட்டிருக்கிறார்.

Advertisement

பாஜக எப்போதும்போல், இரு துணை முதல்வர்களுடன் ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளது. இதில், தேவேந்திர ஃபட்னாவிஸ் பெயர் தான் முதல்வர் பொறுப்புக்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதேபோல், இரு துணை முதல்வர்களில் ஒன்று ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஒதுக்க பேசப்பட்டது. ஆனால், அவர் அதனை மறுத்துள்ளார். மேலும், அந்தப் பதவிக்கு தனது மகன், ஸ்ரீகாந்தை கொண்டுவரவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். மற்றொரு பக்கம் அஜித் பவார் ஒரு துணை முதல்வர் என்பது கிட்டத்தட்ட உறுதி என்கின்றனர்.

அஜித்பவார் துணை முதல்வர் பதவி மட்டுமின்றி, நிதி, சிறுபான்மைத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளையும் கேட்டு வருகிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி, வரும் டிசம்பர் 7-ம் தேதி மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த ஏக்நாத் ஷிண்டே, “ஆலோசனை நல்லபடியாக முடிந்தது. இது முதல் கூட்டம் தான். மகாயுதி மற்றொரு கூட்டத்தையும் நடத்தும். தற்போது அமித்ஷா மற்றும் ஜெ.பி. நட்டாவுடன் பேசினோம். மகாயுதியின் அடுத்த கூட்டத்தில், யார் முதலமைச்சர் என்பதை முடிவு செய்வோம். அந்தக் கூட்டம் மும்பையில் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version