இந்தியா

“விஜய் எத்தனை முறை வெளியே வந்திருக்கிறார்” – அண்ணாமலை கேள்வி

Published

on

“விஜய் எத்தனை முறை வெளியே வந்திருக்கிறார்” – அண்ணாமலை கேள்வி

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், சர்வதேச அரசியல் புத்தாக்கப் படிப்பிற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி லண்டன் சென்றார். மூன்று மாதம் படிப்பு முடிந்து இன்று அவர் தமிழ்நாட்டிற்கு திரும்பினார். சென்னையில் விமானநிலையம் வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisement

அப்போது அவரிடம் துணை முதல்வராக உதயநிதி பதவி ஏற்றது, விஜய் அரசியலுக்குள் நுழைந்தது, செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியது, சீமான் – பாஜக கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கெல்லாம் அவர் கூறியதாவது; “இந்த மூன்று மாதத்தில் தமிழ்நாடு அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உச்ச நட்சத்திரமான விஜய் அரசியலுக்குள் வந்திருக்கிறார். அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். வரும் காலங்களில் எப்போதெல்லாம், பேச முடியுமோ, பேச வேண்டுமோ அப்போதெல்லாம் பேசுவோம். மாநாட்டில் பேசியதற்கு பாஜக தலைவர்கள் எதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமோ அதற்கெல்லாம் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

விஜய் திராவிட சித்தாந்தத்தைத் தான் பேசுகிறார். அதனால், யாருக்கு பாதிப்பு என்பதை மக்கள் கணித்துவிட்டார்கள். பாஜக யாரையும் கண்டு அஞ்சாது. விஜய் 25 ஆண்டுகளாக படிப்படியாக தன்னை உயர்த்திக்கொண்டு வந்திருக்கிறார். ஆனால், அரசியல் களம் என்பது வேறு 365 நாளும் களத்தில் இருக்க வேண்டும். அக்டோபர் 28-க்கு பிறகு எத்தனை முறை விஜய் வெளியே வந்திருக்கிறார். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் வாக்குகள் இன்று மூன்றாக பிரிந்துள்ளது. பாஜகவின் தேசிய வாக்கு என்பது அதிகரித்துள்ளது.

Advertisement

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்றிருக்கிறார். எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதல்வர் என வேகமான வளர்ச்சி. பாஜக எப்போதும் வைக்கும் குற்றச்சாட்டு, திராவிட கட்சிகள் அதிலும் குறிப்பாக திமுக குடும்ப கட்சி என்பது. அதனை இன்று மீண்டும் உண்மை என நிரூபணமாகியிருக்கிறது. வரும் காலங்களில் துணை முதல்வராக உதயநிதியின் செயல்பாடுகள் சரியில்லை என்றால் நிச்சயமாக விமர்சிக்கவும், முறையாக இருந்தால் பாராட்டவும் செய்வோம்.

அகில இந்திய அளவில் பாஜக ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதிலும், ஹரியானாவிலும், மகாராஷ்டிராவிலும் பாஜக வென்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையும், சட்டமன்றத் தேர்தலில் வென்றுள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையையும் பார்த்திருக்கிறீர்கள். குறிப்பாக மகாராஷ்டிராவில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளோம்.

இந்திய அரசியலில் திமுகவும், ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகள் தான் வித்தியாசமான பாதையில் பயணிக்கிறது. குற்றச்சாட்டு ஊர்ஜிதனம் ஆனபிறகும், ஜாமீன் கோரிக்கை பல முறை நிராகரிக்கப்பட்ட பிறகும், அவர்கள் வெளியே வந்திருப்பது. கிட்டத்தட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டார்கள் இனி விசாரணை செய்ய ஒன்றும் இல்லை எனும் காரணத்திற்காக தான் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துள்ளது.

Advertisement

ஆனால், ஒரு நிரபராதியை கொண்டாடுவது போல செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார். இதே தான் ஆம் ஆத்மியிலும் நடக்கிறது. ஊழலோடு மலிந்திருக்கும் திமுக ஜாமீனில் வெளியே வந்திருக்கும் ஒருவரை காந்தியாக, காந்தியவாதியாக கொண்டாடுகிறது. இது தமிழ்நாட்டிற்கு புதிது கிடையாது. கிட்டத்தட்ட புதிய அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு என்பது அவருக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்ததுபோல் முதல்வர் காத்திருந்தார்.

சீமானின் பாதை தனி எங்களின் பாதை தனி. அவர் பாஜகவை விமர்சித்து கொண்டு இருக்கிறார். எனவே அவரின் பாதையில் அவர் போகட்டும், எங்களின் பாதையில் நாங்கள் போகிறோம்.

Advertisement

2026 தமிழ்நாட்டில் சரித்திர தேர்தலாக அமையப்போகிறது. காரணம், சீமான், விஜய், பாஜக, ஏற்கனவே இருக்கும் திராவிட கட்சிகள் எல்லாம் இருக்கிறது. எங்களுடன் கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சியான பாமக, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். அதனால், 2026 தேர்தல் புதிய களமாக இருக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

இதனைத் தொடர்ந்து அப்படியே சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்றார். இன்று மாலை கோவை கொசிடியா வளாகத்தில், ‘விழித்திரு, எழுந்திரு, உறுதியாக இரு’ எனும் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் பங்கேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version