இந்தியா

விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் : எடப்பாடி

Published

on

விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் : எடப்பாடி

வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஒரு ஏக்கருக்கு ரூ. 40,000 நிவாரணம் வழங்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கரையை கடந்தாலும் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழை புதுச்சேரியையும், தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களையும் வெள்ளத்தில் மிதக்க செய்துள்ளது.

Advertisement

இதனையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்களும், அதிகாரிகளும் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் கடலூரில் அதி கன மழை பொழிந்துள்ளது.

Advertisement

இந்த இரு மாவட்டங்களிலும் விளை நிலங்கள் மழை வெள்ளத்தால் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. ஒராண்டிற்குள் இரண்டு முறை வெள்ளத்தால் விளைநிலத்தில் நெற்பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது, அதனை கணக்கிட்டு அவர்களுக்கு உரிய இழப்பீட்டை அதிமுக அரசு வழங்கியது.

வெள்ளத்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டபோது ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கினோம்.

ஆனால் கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியாக ரூ.17 ஆயிரம் நிர்ணயித்தது.

Advertisement

ஆனால் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் விதமாக, இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 13,500 மட்டுமே திமுக அரசு வழங்கியது.

மத்திய அரசு நிர்ணயித்த தொகையை விட 3500 ரூபாய் கொடுத்தே வழங்கினர்.

இந்த முறையாவது, ஸ்டாலின் அரசு வேளாண் துறை அதிகாரிகள் மூலம் பாதிப்பை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும்.

Advertisement

டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அதில், கன மழையின் காரணமாக சுமார் 1 லட்சம் ஏக்கர் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. அதனையும் கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஒரு ஏக்கருக்கு ரூ. 40,000 நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

மேலும் அவர், “எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டிற்கு மதிப்பளிப்பதில்லை என செய்தியாளர்களிடன் இன்று ஸ்டாலின் சொல்கிறார். ஒரு பிரதான எதிர்க்கட்சி மக்கள் பிரச்சனையை உரிய நேரத்திற்கு அரசின் கவனத்திற்கு கொண்டு போகிறோம். அது எங்கள் கடமை. ஆனால் ஆளும் கட்சியின் முதலமைச்சர் அதற்கு உரிய தீர்வை காண்பது அவரின் கடமை. ஆனால் இன்று இருக்கின்ற முதலமைச்சர் எதையும் செய்வதற்கு திராணியற்றவராகவே உள்ளார்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டேன். புயல் மழையின் கோரத் தாண்டவத்தால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

Advertisement

திண்டிவனத்தில் கிடங்கல் ஏரியில் இருந்து நாகலாபுரம் செல்லும் பாலம் உடைந்து, திமுக ஆட்சியால் மூன்றாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஏரியின் உபரி நீர் நகரத்துக்குள் வெள்ளமாக செல்கிறது. சிறப்பான ஆட்சி நடத்துவதாக சொல்லும் ஸ்டாலின் இங்கு வந்து பார்த்தால் இந்த ஆட்சியின் அவல நிலை தெரியும்

20 செ.மீ. மழை பெய்தாலும் சென்னையின் சாலைகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என்றார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வடிகால் பணிகள், திமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் தான் சென்னையில் இன்னும் தண்ணீர் தேங்கும் நிலை நீடிக்கிறது , இது மிகவும் கண்டனத்திற்குரியது.

மேலும், புயல் மற்றும் பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முழுமையாகக் கணக்கெடுத்து, உரிய நிவாரணம் வழங்கவும் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என எடப்பாடி அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version