இந்தியா
Cyclone Fengal | 12 மணிநேரமாக நகராமல் இருந்த ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது… அடுத்து என்ன?
Cyclone Fengal | 12 மணிநேரமாக நகராமல் இருந்த ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது… அடுத்து என்ன?
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதற்கிடையே, நேற்று இரவு 11.30 மணிக்கு ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தது. கரையை கடந்தும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்காமல், புயலாகவே நீடித்தது. புயலில் ஒரு பகுதி நிலப்பகுதியில் கொஞ்சம், கடல் பகுதியில் கொஞ்சம் இருப்பதால், புயலுக்கு தேவையான ஈரப்பதம் கடலில் இருந்து கிடைத்துக்கொண்டே இருந்தது. மேற்கு பகுதியில் உயர் அழுத்தம் இருப்பதால், இந்த புயல் கரையை முழுமையாக கடக்காமல், ஒரே இடத்தில் நீடித்ததாக தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தகவல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது. காலை 11.30 மணிக்கு ஃபெஞ்சல் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அருகே 30 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. நிலப்பரப்பில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழக்கும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 12 மணிநேரத்தில் மெதுவாக நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என்றும் வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியை புரட்டிப்போட்டுவிட்டு நகராமல் இருந்த புயல் வலுவிழந்ததால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.