இந்தியா
TN Rain | திருவண்ணாமலையில் 2 வீடுகளில் விழுந்த பாறைகள்… இடிபாடுகளில் சிக்கிய 7 பேரின் கதி என்ன?
TN Rain | திருவண்ணாமலையில் 2 வீடுகளில் விழுந்த பாறைகள்… இடிபாடுகளில் சிக்கிய 7 பேரின் கதி என்ன?
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஏரி நிரம்பி உபரி நீரானது சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆட்சியர் குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், வளாகத்தினுள்ளே வெள்ளநீர் புகுந்தது.
இதனிடையே, திருவண்ணாமலை மாநகராட்சியைச் சுற்றியுள்ள ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்ததால் நகரமே வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. மாரியம்மன் கோயில் தெரு, காந்தி நகர், ராதாபாய் நகர், சமுத்திரம் நகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டனர். துர்க்கை அம்மன் கோயில் குளம் நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் சின்னக்கடை சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, திருவண்ணாமலை கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் அடிவாரப் பகுதியில் தற்போது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் கருமாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள மலை அடிவாரப் பகுதிகளில் மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததில் அடிவாரப் பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் இடிபாடுகள் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், மண் சரிவில் ஏழு நபர்கள் வரை சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவர்களின் கதி என்னவென்பது தெரியாமல் உள்ளது.
தற்போது இரவு நேரம் என்பதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்படுகிறது. நாளை காலை தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் வந்ததும் மீட்புப் பணி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் மண் சரிவு ஏற்பட்ட பகுதியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.