நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 02/12/2024 | Edited on 02/12/2024

பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் விக்ராந்த் மாஸ்ஸி. மேலும் குறும்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருந்தார். மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்திருந்த இவர், 12த் ஃபெயில் படம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தார். பின்பு சமீபத்தில் வெளியான ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதோடு அரசியல் உள்நோக்கத்தோடு இந்தப் படத்தை எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இன்னும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் இவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்திருப்பதாவது, “கடந்த சில வருடங்களும் அதற்கு பின்னால் நடந்த விஷயங்களும் தனித்தன்மை வாய்ந்தவை. உங்களின் ஆதரவிற்கு நன்றி. நான் முன்னோக்கி செல்ல வேண்டும் என யோசிக்கையில், ஒரு கணவராக, தந்தையாக, மகனாக மற்றும் நடிகராக வீட்டிற்கு போக இதுதான் சரியான நேரம் என்பதை புரிந்து கொண்டேன்.   

Advertisement

2025ல், கடைசியாக ஒருவரை ஒருவர் சந்திப்போம். என்னுடைய கடைசி இரண்டு படங்கள் இருக்கிறது. அதோடு இத்தனை ஆண்டுகள் நிறைய அழகான தருணங்கள் இருக்கிறது. எல்லாத்துக்கும் நன்றி” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இவரது திடீர் முடிவு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.