இந்தியா
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை கனமழையால் துண்டிப்பு.. மாற்றுவழி இதோ
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை கனமழையால் துண்டிப்பு.. மாற்றுவழி இதோ
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை – திருச்சி நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு வாகனங்கள் வேறுவழியாக திருப்பிவிடப்படுகின்றன.
ஃபெஞ்சல் புயல் காரணமாக அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 சென்டி மீட்டர் அதி கனமழை கொட்டிய நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களை மழை வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது. புதுச்சேரியில் விடிய விடிய கொட்டிய கனமழையால் 50,000 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. தட்டாஞ்சாவடியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதந்தன.
மேலும் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகனமழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை – திருச்சி செல்லும் வாகனங்கள் விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் வழியாக திருப்பி விடப்படுகிறது. திருச்சி – சென்னை வரும் வாகனங்கள் பண்ரூட்டி, கோலியனூர் வழியாக மாற்றிவிடப்படுகிறது.
இதனிடையே திருவண்ணாமலையில் பெய்த கனமழை காரணமாக மண் சரிவால் புதையுண்ட வீட்டில் சிக்கிய 4 சிறுமிகள் உட்பட 7 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தீப மலையின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 2000 அடிக்கு மேல் மலையில் இருந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்திற்கு முன்பகுதியில் நிலச்சரிவு என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வஊசி நகர் மலைப்பகுதியில் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது 3 வது நிலச்சரிவு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read :
திருவண்ணாமலையில் 2000 அடிக்கு மேல் மீண்டும் மிகப்பெரிய நிலச்சரிவு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வரலாறு காணாத மழையால் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் முழுமையாக நிரம்பி கரை புரண்டு ஓடி வரும் நிலையில், காமராஜ் நகர், அண்ணா நகர் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.